தற்போதைய செய்திகள்

புரட்சித்தலைவி அம்மாவால் உயர்கல்வி உலகத் தரத்துக்கு உயர்வு – அமைச்சர் கே.பி.அன்பழகன் பெருமிதம்…

தருமபுரி:-

புரட்சித்தலைவி அம்மாவால் உயர்கல்வி உச்சத்தைத் தொட்டு உலகத் தரத்தைப் பெற்றிருக்கிறோம் என்று தருமபுரி பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற தொழில் நுட்ப திறன் வளர்த்தல் பயிற்சி முகாம் நிறைவு விழாவில் 150 மாணவர்களுக்கு பயிற்சி சான்றிதழ்கள் வழங்கி அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற தொழில் நுட்ப திறன் வளர்த்தல் பயிற்சி முகாம் நிறைவு விழாவில் 16 பாலிடெக்னிக் கல்லூரிகளை சேர்ந்த 150 மாணவர்களுக்கு பயிற்சி சான்றிதழ்களை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார். இவ்விழாவிற்கு தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மாநில மன்றம் சென்னை உறுப்பினர் செயலர் ஆர்.சீனிவாசன் தலைமை வகித்தார்.

இவ்விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:-

தடைகளை உடைத்து மடைகளைத் திறந்து மாற்றங்களைத் தந்தவர்” புரட்சித்தலைவி அம்மா. அவர்களால் உயர்கல்வி உச்சத்தைத் தொட்டது உலகத் தரத்தைப் பெற்றது. புரட்சித்தலைவி அம்மா ஆட்சிக்காலத்தில் 2011 முதல் 2017 கல்வியாண்டு வரை 65 புதிய கல்லூரிகள் துவங்கப்பட்டன. மேலும் முதலமைச்சர் 2017-2018-ம் கல்வியாண்டில் 11 புதிய கல்லூரிகளை வழங்கியதன் மூலம் தமிழகத்தில் மொத்தம் 76 கல்லூரிகள் துவக்கப்பட்டுள்ளன. 2018-19 ம் கல்வி ஆண்டில் 5 அரசு பலவகைத் தொழில் நுட்பக்கல்லூரிகள் துவக்கப்பட்டு ஏழை எளிய மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் திருநெல்வேலி, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய மூன்று மண்டல மையங்களில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் 4 இளநிலை பொறியியல் பட்டப்படிப்புகளை ஏற்படுத்தி 240 ஏழை எளிய மாணவர்கள் படித்து பயன்பெற வகை செய்தவர் முதலமைச்சர். 41 பல்கலைக்கழக உறுப்பு கலை கல்லூரிகளை மாணவர் நலன் கருதி அரசு கல்லூரிகளாக மாற்றி மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். இதன் மூலம் குறைந்த கட்டணத்தில் ஏழை எளிய மாணவர்களும் உயர்கல்வி பயில வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஏழை மாணவர்கள் குறைந்த கட்டணத்தில் தொழில்கல்வி பயிலவும், கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் நலன் கருதியும் 7.10.2017 அன்று தருமபுரியில் நடைபெற்ற டாக்டர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் தருமபுரி மாவட்ட பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் கீழ் இயங்கும் இக்கல்லூரியை அரசே ஏற்று நடத்தும் என்று முதலமைச்சர் அறிவித்தார்.

அதன்படி கடந்த ஜனவரி 30ம்தேதி சுயநிதி கல்லூரியாக செயல்பட்டு வந்த இக்கல்லூரியை 2018-2019ம் கல்வியாண்டு முதல் அரசு பாலிடெக்னிக் கல்லூரியாக மாற்றப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. இக்கல்லூரியில் தொடர் செலவினத்திற்காக ரூ.6.5 கோடியும், ஆய்வக உபகரணங்கள், கணினிகள் மற்றும் நூலகத்திற்கு புத்தகங்கள் வாங்குவதற்காக ரூ.50 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் மூலமாக இப்பயிற்சித் திட்டமானது கிராமப்புற பகுதிகளில் உள்ள இறுதியாண்டு பயிலும் பலவகை தொழில்நுட்ப மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்கள் வேலைவாய்ப்பு பெறுவதற்கும் தொழில் முனைவோர்களாக மாறி புதிய தொழில் துவங்கிடவும் வழி வகை செய்கிறது என்பது பாராட்டத்தக்க ஒன்று. பலவகை தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் மற்றும் பொறியியல் மாணவர்கள் எளிதில் வேலை வாய்ப்பு பெறுவதற்கும் தொழில் முனைவோர்களாகவும் மாறுவதற்கு வழி வகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் ஒரு ஆண்டுக்கு ரூ.10 லட்சம் செலவில் 10 மாவட்டங்களில் 3000 மாணவர்கள் பயனடையும் வகையில் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 91 மையங்களில் 97 லட்சம் செலவில் 28,300 மாணவர்கள் பயனடையும் வகையில் நடத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள மாணவர்களின் நலன் மற்றும் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு இத்திட்டமானது மேலும் 15 மாவட்டங்களுக்கு விரிவாக்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்திற்கான நிதி ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.22.50 லட்சமாக 2018-19 ம் ஆண்டு முதல் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. எனவே, இனிவரும் காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் 4500 இறுதியாண்டு பயிலும் பலவகை தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் மற்றும் பொறியியல் மாணவர்கள் எளிதில் வேலை வாய்ப்பு பெறுவதற்கும் தொழில் முனைவோர்களாக மாறுவதற்கும் வகை செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சர் தமிழகத்தில் உள்ள பல முன்னணி தொழில் நிறுவனங்களை அழைத்து பொறியியல் பட்டதாரிகளுக்கான செயல்திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு மேம்படுத்துதல் தொடர்பாக தொழிற்சாலைகள் மற்றும் தொழிற்கல்வி நிறுவனங்களுக்கிடையேயான கலந்தாய்வு கூட்டத்தை 10.09.2018 அன்று நடத்தியுள்ளார். அதன் மூலம் வருங்காலத்தில் தொழிற்திறன் வாய்ந்த மனிதவளம் மேலும் அதிகரிக்கவும், பொறியியல் பட்டதாரிகளுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்புகள் கிடைக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் அனைவரும் இது போன்ற பயிற்சித்திட்டங்களில் பங்கேற்று எளிதில் வேலைவாய்ப்பும், தொழில் முனைவோருக்கான பயிற்சியினைப்பெற்று புதிய தொழில்கள் துவங்கிடவும் முன்வரவேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.

இவ்விழாவில் பாலக்கோடு அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் (பொ) பி.எஸ்.செண்பகராஜா, பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் தொ.மு.நாகராசன், முன்னாள் ஒன்றியக்குழுத்தலைவர் கோபால், முன்னாள் பாலக்கோடு சர்க்கரை ஆலை தலைவர் கே.வி.அரங்கநாதன், கூட்டுறவு சங்கத்தலைவர் வீரமணி, முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் சங்கர், கல்லூரி துணை முதல்வர் ரவி, ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.