தற்போதைய செய்திகள்

புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் செயல்படும் தமிழக அரசு – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சு…

கரூர்:-

புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் செயல்படுகிறது தமிழக அரசு என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் மண்மங்கலம் வட்டத்திற்குட்பட்ட மண்மங்கலம், வாங்கல் மற்றும் மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி ஆகிய ஊராட்சிகளில்  நடைபெற்றது. போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாவட்ட வருவாய் அலுவலர் சி.இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுகொண்டார்.

பின்னர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியதாவது:-

மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்த புரட்சித்தலைவி அம்மா அவர்கள்தான் மக்களைத்தேடி அரசு என்ற உன்னத திட்டத்தை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வந்தார். புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் செயல்படும் முதலமைச்சர் இந்த திட்டத்தை மேலும் மெருகூட்டி நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராமங்கள் தோறும் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டங்கள் நடத்தப்படவேண்டும் என்றும் மேலும், ஒரு மாத காலத்திற்குள் இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தகுதியான நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்களில் பெரும்பாலும், முதியோர் உதவித்தொகை மற்றும் விதவை உதவித்தொகை கோரி விண்ணப்பங்களே அதிகமாக வருகின்றது. மக்களின் மனநிலையை உணர்ந்த முதலமைச்சர் தமிழகத்தில் 5 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை மற்றும் விதவை உதவித்தொகைகளை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

முதியோர் உதவித்தொகையினை ரூ.500 லிருந்து ரூ.1000 மாக உயர்த்தி வழங்கியவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். முதியோர் உதவித்தொகையாக ரூ.500 வழங்கப்பட்டபோது நமது கரூர் மாவட்டத்தில் 12,000 நபர்களுக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது மாதம் 29,000 நபர்களுக்கு ரூ.1000 மாதாந்திர உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகின்றது. தகுதியுள்ள மீதமுள்ள நபர்களுக்கும் முறையாக உதவித்தொகைகள் வழங்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமிழகத்தின் வளர்ச்சிக்காக, தமிழக மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக எண்ணற்ற திட்டங்களை வழங்கியவர். குறிப்பாக மாதந்தோறும் 20 கிலோ விலையில்லா அரிசி, மகப்பேறு நிதிஉதவி, ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவியுடன் கூடிய தாலிக்குத் தங்கமாக 8கிராம் வழங்கும் திட்டம், விலையில்லா ஆடுகள், மாடுகள் மற்றும் கோழிகள் வழங்கும் திட்டம், மிக்ஸி, கிரைண்டர், மற்றும் மின்விசிறி வழங்கும் திட்டம், வளர் இளம் பெண்களுக்கான சத்தான உணவுப்பொருட்கள் வழங்கும் திட்டம், இரண்டு பெண்குழந்தை பெற்றால் நிதியுதவி திட்டம் என எண்ணிலடங்கா திட்டங்களை புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் செயல்படும் தமிழக அரசு செயல்படுத்தி வருகின்றது.

இந்திய துணைக்கண்டத்திலேயே மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் ஒரே மாநிலம் தமிழகம் மட்டும்தான். கடந்த 8 ஆண்டுகளில், தமிழகத்தில் சுமார் 50 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது. பணிபுரியும் பெண்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க ரூ.20,000 மானிய உதவித்தொகை வழங்கப்படும் என்று புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அறிவித்து செயல்படுத்தினார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அந்த மானியத்தை ரூ.25,000மாக உயர்த்தி அறிவித்து செயல்படுத்திவருகின்றார். அதுமட்டுமல்லாது, நடப்பாண்டிற்கான நிதிநிலை அறிக்கையிலே 1 லட்சம் பணிபுரியும் பெண்களுக்கு மானியத்துடன் கூடிய இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

விவாசயிகளுக்கான இடுபொருட்கள், மானிய விலையில் வேளாண் கருவிகள், கூட்டுறவு வங்கியிலே வட்டியில்லா கடன், மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு சுழல்நிதி என்று மக்களின் வாழ்வாதரத்தை பெருக்கும் வகையிலான எண்ணற்ற திட்டங்கள் புரட்சித்தலைவி அம்மாவின் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

சுமார் ரூ.300 கோடி மதிப்பீட்டில் 1000 படுக்கைகளுடன் 150 மாணவ-மாணவிகள் பயிலக்கூடிய – அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ரூ.13.20 கோடி மதிப்பீட்டில் பசுபதி பாளையம் மற்றும் குளத்துப்பாளையத்தில் குகைவழிப்பாதை, சுமார் ரூ.500 கோடி மதிப்பீட்டில் நஞ்சை புகளுர் பகுதியில் 1.15 டி.எம்.சி நீரை தேக்கும் கதவணை கட்ட ஆணை வழங்கப்பட்டு திட்டம் குறித்து ஆய்வு செய்ய ரூ.50லட்சம் ஒதுக்கீடு, ரூ.22.12 கோடி மதிப்பீட்டில் கரூர் நகரப்பகுதிகளில் 20 சாலைகளை இணைத்து புறவழிச்சாலையை அடையும் அம்மா சாலை, சுமார் ரூ.145 கோடி மதிப்பீட்டில் கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களை இணைக்கும் ‘நெரூர் – உன்னியூர் பாலம் என முதலமைச்சர் கரூர் மாவட்டத்திற்கு எண்ணற்ற திட்டங்களை வாரி வழங்கி வருகின்றார்.

கரூர் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் தவிட்டுப்பாளையம், மண்மங்கலம், செம்மடை பிரிவு, வெண்ணமலை பிரிவு, பெரியார் நகர், கோடங்கிபட்டி, வீரராக்கியம், அரவக்குறிச்சி ஆகிய 8 இடங்களில் முதலமைச்சரின் உத்தரவைபெற்று விரைவில் உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்கும் பணி நடைபெற இருக்கின்றது.

போக்குவரத்துத்துறையின் சாலை பாதுகாப்பு நிதியில் இருந்து தேசிய நெடுஞ்சாலையின் முக்கிய பகுதிகளில் உயர்மின்கோபுரங்கள் அமைக்கப்பட்டதால் அப்பகுதிகளில் விபத்துக்கள் குறைந்திருக்கின்றது. அனைத்துப்பகுதிகளிலும் குடிநீர்த்தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்தில் நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு மனுவும் கணினியில் பதிவு செய்யப்பட்டு உரிய நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு தகுதியுள்ள அனைவருக்கும் விரைவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, கரூர் வருவாய் கோட்டாச்சியர் சந்தியா, கரூர் வட்டரா வளர்ச்சி அலுவலர் மனோகர், வட்டாட்சியர் மண்மங்கலம ரவிக்குமார், கரூர் நகர கூட்டுறவு வங்கித்தலைவர் திருவிக, கூட்டுறவு சங்க பிரதிநிதி கமலகண்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.