சிறப்பு செய்திகள்

புரட்சித்தலைவி பிறந்தநாளில் பிறந்த குழந்தைகளுக்கு தங்கமோதிரம் பரிசு – துணை முதல்வர் வழங்கினார்…

மதுரை:-

திருமங்கலம் தொகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் புரட்சித்தலைவி அம்மா பிறந்தநாளில் பிறந்த குழந்தைகளுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தங்க மோதிரங்களை பரிசாக வழங்கினார்.

புரட்சித்தலைவி அம்மாவின் 71-வது பிறந்தநாளில் மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் அணிவிக்கும் நிகழ்ச்சி கழக அம்மா பேரவை சார்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கழக அம்மா பேரவை செயலாளரும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் செய்திருந்தார்.

அதன்படி செக்காணூரணி அரசு மருத்துவமனையில்  24-ம்தேதி பிறந்த குழந்தைகளுக்கு தங்கமோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கழக அம்மா பேரவை செயலாளரும், வருவாய்த்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கினார். குழந்தைகளுக்கு தங்கமோதிரம் மற்றும் குழந்தைகளுக்கு பேபி பெட், பவுடர், மற்றும் பிஸ்கட், ஹார்லிக்ஸ், ரொட்டிகள் உட்பட பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை கழக ஒருங்கிணைப்பாளரும், துணைமுதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

அம்மாவின் 71-வது பிறந்தநாள் விழாவில் தமிழகம் முழுவதும் கழகத்தின் சார்பிலும், மற்றும் கழக அம்மா பேரவை உள்ளிட்ட பல்வேறு அணிகளின் சார்பிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக அம்மாவின் பிறந்தநாள் விழாவை ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் விழாவாக கொண்டாடி அம்மாவின் கனவை நாங்கள் நனவாக்கி வருகிறோம் .

பிப்ரவரி 24ம்தேதி பிறந்த குழந்தைகளுக்கு தங்கத்தாரகை அம்மாவின் திருநாமத்தில் இயங்கும் அம்மா பேரவை சார்பில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில் தங்கமோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து இதுபோன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று இந்தியாவிலேயே எந்த தலைவருக்கும் இதுபோன்று பிறந்தநாள் விழா கொண்டாடியதில்லை என்ற புதிய வரலாற்றை கழகம் படைக்கும். நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் கழக கூட்டணி இமாலய வெற்றிபெறும்.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.