இந்தியா மற்றவை

புல்வாமா சம்பவத்தை போன்று மீண்டும் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி திட்டம் – உளவுத்துறை எச்சரிக்கை…

புதுடெல்லி:-

புல்வாமா தாக்குதல் போன்று மேலும் ஒரு தாக்குதலை நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டு உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 14-ந்தேதி துணை ராணுவ வீரர்கள் பயணம் செய்த வாகனங்களை குறி வைத்து பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பினர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினார்கள். இந்த மோட்டார் சைக்கிள் வெடிகுண்டு தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த 2 வீரர்கள் உள்பட 40 துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் முகாமை இந்திய விமானப்படை குண்டுவீசி தாக்குதல் நடத்தி அழித்தது.

இதற்கு பழிவாங்கும் நோக்கத்தில் புல்வாமா போன்ற மீண்டும் ஒரு தாக்குதலை நடத்த தீவிரவாதிகள் நாடாளுமன்றத் தேர்தலின் போது திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்தள்ளனர். இதைத்தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து உளவுத்துறை வட்டாரங்கள் கூறியதாவது:-

புல்வாமா தாக்குதல் நடத்தியவர்கள் மோட்டார் சைக்கிளில் இருபுறமும் வெடிபொருட்களுடன் சென்று தாக்குதல் நடத்தி உள்ளனர். இரு சக்கர வாகனங்கள் எந்த ஒரு இலக்கையும் அடைவது மிகவும் எளிதானது. எனவே இந்தியாவின் முக்கியமான பகுதிகளில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் போதோ அல்லது பிரச்சாரத்தின் போதோ இதுபோன்ற தாக்குதல் நடத்தப்படலாம் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது.

உளவுத்துறை அமைப்புகள் இது குறித்து பாதுகாப்பு படையுடன் தீவிரவாத எச்சரிக்கையை பகிர்ந்து கொண்டுள்ளன. எந்தவித அசம்பாவித சம்பவத்தையும் தவிர்ப்பதற்காக கூடுதல் பாதுகாப்பை ஏற்படுத்துமாறு எல்லைப்பு மாநில அரசுகளை உளவுத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.