தற்போதைய செய்திகள்

புழுகு மூட்டைகளை அவிழ்த்து விடும் ஸ்டாலினுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் – அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேச்சு…

திண்டுக்கல்

வாய் கூசாமல் பொய் பிரச்சாரம் செய்யும் ஸ்டாலினுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுங்கள் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி. சீனிவாசன் பேசினார்.

திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி கழக கூட்டணியின் பா.ம.க. வேட்பாளர் ஜோதிமுத்து, நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளர் தேன்மொழி ஆகியோரை ஆதரித்து திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஒன்றியத்திற்குட்பட்ட ஜம்புதுரைகோட்டை, கோட்டூர், பச்சைமலையான்கோட்டை, நரியூத்து, கோடாங்கிநாயக்கன்பட்டி, நூத்துலாபுரம் ஊராட்சிகளை சேர்ந்த கிராமங்களில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது:-

சென்னை மெரினா கடற்கரையில் திமுக தலைவர் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய 6 அடி நிலம் கூட வழங்க அ.தி.மு.க அரசு மறுத்து விட்டது என மு.க.ஸ்டாலின் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார். இதில் துளியளவு கூட உண்மை இல்லை. பெருந்தலைவர் காமராஜர் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அப்போதைய முதலமைச்சராக இருந்த கருணாநிதி மறுத்து விட்டார். இதேபோல் புரட்சித்தலைவரின் மனைவி ஜானகி அம்மாள் இறந்தபோது கடற்கரையில் உடலை அடக்க முயற்சி செய்த போது அப்போதைய முதல்வராக இருந்த கருணாநிதி நிலம் கொடுக்க மறுத்து விட்டார். முதலமைச்சராக இருந்து ஒருவர் இறந்தால் மட்டுமே மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய வேண்டும் என்று கூறி ஒரு கோப்பில் கையெழுத்திட்டார். அதன்படி பார்த்தால் நிச்சயமாக கருணாநிதிக்கு நிலம் கொடுத்திருக்க வாய்ப்பில்லை.

மேலும் மெரினா கடற்கரை நிலம் தொடர்பாக மு.க.ஸ்டாலின் கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்து இருந்தார். அந்த வழக்கு நிலுவையில் இருந்ததால் உடனடியாக நிலம் கொடுக்க அரசு யோசித்தது. இதனை அடுத்து தி.மு.க தொடர்ந்த வழக்கை ஸ்டாலின் இரவோடு இரவாக வாபஸ் பெற்றுக் கொண்டார். அதன் பிறகுதான் நிலம் கொடுக்க முடிந்தது என்பது உண்மை. சென்னை மெரினா கடற்கரையில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய நிலம் வழங்காததற்கு தி.மு.க.வும், ஸ்டாலினும் தான் காரணம். இதையெல்லாம் மறைத்துவிட்டு தற்போது ஓட்டுக்காக வாய்கூசாமல் ஸ்டாலின் பொய் பிரச்சாரம் செய்கிறார். வழக்கு தொடர்வதையும், தனக்கு தேவை என்றால் உடனடியாக வழக்கை வாபஸ் பெறுவதையும் மு.க.ஸ்டாலின் வாடிக்கையாக கொண்டுள்ளார். அவருக்கு நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் மக்கள் தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசினார்.

பிரச்சாரத்தின் போது மாவட்ட கழக பொருளாளர் உதயகுமார் எம்.பி., ஒன்றிய செயலாளர் யாகப்பன், பேரூர் கழக செயலாளர்கள் தண்டபாணி, சேகர் மற்றும் கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.