தற்போதைய செய்திகள்

பூஜ்ஜியத்தை விட்டு வெளியே வந்தால் பா.ஜ.க. சதம் அடித்திருப்பது தெரியும் – மு.க.ஸ்டாலினுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் பதிலடி…

கன்னியாகுமரி

பூஜ்ஜியத்தை விட்டு வெளியே வந்தால் பா.ஜ.க. சதம் அடித்திருப்பது தெரியும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் பதிலடி கொடுத்துள்ளார்.

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நாகர்கோவில் அருகே பறக்கையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தேர்தல் அறிக்கையை எவ்வளவு பொறுப்போடு கொடுக்க முடியுமோ அந்த அளவுக்கு பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை கொடுத்துள்ளது. விவசாயிகள், தொழில் முனைவோர் என அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் உள்ளது. பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை பூஜ்ஜியம் என்று ஸ்டாலின் கூறியிருக்கிறார். அவர் பூஜ்ஜியத்திற்கு உள்ளே ஒரு ராஜ்ஜியம் என வாழ்ந்து வருகிறார். வௌியே வந்து பார்த்தால் பா.ஜ.க. சதம் அடித்திருப்பது அவருக்கு தெரியும்.

நான்குநேரி தொகுதியில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் வசந்தகுமார் கன்னியாகுமரிக்கு வருகிறார். வசந்தகுமாரை ஆதரித்து குமரி மாவட்டத்தில் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டது அவருக்கு ஒரு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.தமிழக அரசு தமிழக மக்கள் மீதும், விவசாயிகள் மீதும் மிகுந்த அக்கறை கொண்டு செயல்பட்டு வருகிறது. எனவே கழக கூட்டணி அமோக வெற்றி பெறும்.