தற்போதைய செய்திகள்

பூரண மதுவிலக்கை நிச்சயம் அமல்படுத்துவோம் – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ உறுதி…

தூத்துக்குடி:-

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை நிச்சயம் அமல்படுத்துவோம் என்று அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு ரூ.2.60 கோடியில் புதிய கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் நடந்த இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி கட்டட பணியை தொடங்கி வைத்தார்.

கோவில்பட்டி நகராட்சியில் தூய்மை இந்தியா இயக்கம் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் ரூ.50.67 லட்சத்தில் வாங்கப்பட்ட 9 இலகு ரக வாகனங்களை அமைச்சர் தொடங்கி வைத்தார். பின்னர் காந்தி நகர் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டத்தின் கீழ் ரூ.1.40 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். முன்னதாக கோவில்பட்டி அருகே வானரமுட்டி ஊராட்சி ராமலிங்கபுரத்தில் ரூ.8.70 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டடத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சிகளில், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, கோவில்பட்டி கோட்டாட்சியர் அமுதா, சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் மல்லிகா, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சந்திரசேகர், மன்னர் மன்னன், ஆய்வாளர் அமர்நாத், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுகுமார், உதவி செயற்பொறியாளர் அருள்நெறி செல்வம், உதவி பொறியாளர் பிரசன்னா, நகராட்சி ஆணையாளர் அச்சையா, நகராட்சி பொறியாளர் கோவிந்தராஜ், உதவி பொறியாளர் சரவணன், கல்வி மாவட்ட அலுவலர் மாரியப்பன், பள்ளி துணை ஆய்வாளர் செல்ல குருசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன்பின்னர் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அம்மாவின் மறைவுக்கு பின்பு ஏற்பட்ட சூழ்நிலையில் தற்போதுள்ள முதல்வரை தேர்ந்தெடுத்து சட்டமன்ற உறுப்பினர்கள் தான், இந்த பதவி யாரும் போட்ட பிச்சை கிடையாது. கடந்த சட்டமன்ற தேர்தலில் எந்த தொகுதியிலாவது டி.டி.வி. தினகரன் பிரச்சாரம் செய்தாரா? அவரை அம்மா ஒதுக்கி வைத்திருந்தார். இதில் 18 பேர் துரோகம் செய்து சென்றுள்ளனர். துரோகம் செய்தவர்கள் அவருடன் உள்ளனர். இதன் விளைவாக அவர்கள் அனைவரும் பதவியை இழந்துள்ளனர். இதற்கு தேர்தல் வரும்போது மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு சாத்தியப்படும். ஏற்கனவே 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது கழக தேர்தல் அறிக்கையில், 2021-ம் ஆண்டுக்குள் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வரப்படும் என அம்மா தெரிவித்திருந்தார். தேர்தல் அறிக்கையில் கூறியதை நூறு சதவீதம் நிறைவேற்றக்கூடிய ஒரே அரசு கழக அரசு தான். தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது போன்று 1000 மது கடைகள் மூடப்பட்டுள்ளன. படிப்படியாக குறைத்து தேர்தல் அறிக்கையில் சொன்னது போன்று நிறைவேற்றப்படும். இரட்டை இலை சின்னம் கேட்டு எத்தனை முறையீட்டுக்கு சென்றாலும், அ.இ.அ.தி.மு.க. பெயர், கொடி எங்கிருக்கிறதோ அங்கு தான் சின்னம் வரும். இரட்டை சிலை எங்களுக்கு தான் சொந்தம்.

ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கண்டது கழக அரசு தான். ஆனால் ஆலைக்கு அத்தனை உதவிகளும் செய்ததது திமுக அரசு. 1996-ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலை திறக்கும்போது திமுக ஆட்சி தான் இருந்தது. 2007-ம் ஆண்டு 245 ஏக்கர் அந்த ஆலை விரிவாக்கத்துக்கு கொடுத்தபோது தற்போதைய எதிர்கட்சி தலைவர் தான் அன்று தொழில்துறை அமைச்சராக இருந்தார். இதையெல்லாம் உத்தரவாக அரசின் நகலை, அடுத்த கூட்டத்தில் பத்திரிகையாளர்களை சந்திக்கும்போது கொண்டு வர தயாராக இருக்கிறேன். அதை மறுப்பதற்கு அவர்கள் தயாரா?

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கூறினார்.