தற்போதைய செய்திகள்

பூவும், இலையும், பழமும் சேர்ந்து வெற்றி முரசு கொட்டுவது உறுதி – பிரேமலதா விஜயகாந்த் நம்பிக்கை…

திருப்பூர்:-

பூவும், இலையும், பழமும் சேர்ந்து வெற்றி முரசு கொட்டுவது உறுதி என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்  கோவை நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரித்து பல்லடத்திலும், திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தனை ஆதரித்து வெள்ளியங்காடு நால்ரோடு, எம்.எஸ்.நகரிலும் திறந்த வேனில் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

கழகம், தே.மு.தி.க. கூட்டணி இயற்கையான கூட்டணி. பூவும், இலையும், பழமும் சேர்ந்து வெற்றி முரசு கொட்டுவது உறுதி.கழகம், தே.மு.தி.க. கூட்டணியை உடைக்க தி.மு.க. பல்வேறு சூழ்ச்சிகளுடன் கடுமையாக முயற்சி செய்தது. ஆனால் மக்கள் போற்றும் கூட்டணியாக கழகம் தலைமையிலான கூட்டணி அமைந்துள்ளது. கருத்து கணிப்புகள் இந்தியாவின் அடுத்த பிரதமராக மீண்டும் மோடி வருவார் என்று தெரிவிக்கிறது. நாட்டை காப்பதற்கு பிரதமர் மோடி வர வேண்டும். ஊழல்களின் மொத்த உருவமாக தி.மு.க. காங்கிரஸ் கட்சிகள் இருந்ததை மக்கள் மறந்து விடவில்லை. மோடி ஊழல் இல்லாத ஆட்சியை கொடுத்துள்ளார்.

எதிரணியில் யார் பிரதமர் வேட்பாளர் என்று தெரிவிக்காமல் உள்ளனர். ராகுல் காந்தியை கூட மறைமுகமாகத்தான் கூறி வருகிறார்கள். கழகம், தே.மு.தி.க. கட்சிகள் ராணுவ கட்டுப்பாடு கொண்டது. பணிவு கொண்ட பக்திமான்கள் இங்கு இருக்கிறார்கள். எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா, விஜயகாந்த் ஆகியோர் திரையுலகில் இருந்து வந்தவர்கள். மக்களுக்கு நல்லதை செய்ய அரசியலுக்கு வந்தவர்கள். இந்த நாடாளுமன்ற தேர்தலில் மட்டுமில்லாமல் வருகிற உள்ளாட்சி தேர்தல், வரும் சட்டமன்ற தேர்தலிலும் கழகம், தே.மு.தி.க. கூட்டணி உறுதியுடன் தொடரும்.

பல்லடம் பகுதியில் கைத்தறி, விசைத்தறி தொழில்அதிகம் உள்ளது. பா.ஜனதா வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதும் டெல்லி சென்று நெசவாளர்களின் பிரச்சினையை எடுத்துக்கூறி, ஜி.எஸ்.டி.யை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். காடா துணி தயாரிப்பு உலகத்தரத்தில் மேம்படுத்தப்படும். விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. புலவாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுத்ததே பிரதமர் மோடி மிகவும் தைரியமானவர் என்பதை எடுத்து காட்டுகிறது. ராகுல் காந்தி எவ்வளவு முயன்றாலும் மோடிக்கு அருகில் கூட செல்ல முடியாது. அது மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசத்தை போன்றதாக இருக்கும்.

காங்கிரஸ் ஆட்சியில் சொல்லி கொள்ளும் அளவிற்கு எந்த திட்டங்களும் செய்யப்படவில்லை.
தமிழகத்தில் காங்கிரசுடன், கம்யூனிஸ்டு கட்சிகள் கூட்டணி சேர்ந்துள்ளன. ஆனால் கேரளாவில் இரண்டும் எதிரணியாக இருக்கின்றன. மக்கள் இவர்களை நம்ப தயாராக இல்லை. எதிர்கட்சிகளுக்கு வாக்கு வங்கியும் இல்லை. வாக்குசேகரிக்க ஆளும் இல்லை. இதனால் நமது கூட்டணி மாபெரும் வெற்றியை பெறும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பிரசாரத்தின் போது கழக வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.குணசேகரன், வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. விஜயகுமார், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் முத்து வெங்கடேஸ்வரன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.