விளையாட்டு

பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து – ஹர்திக் பாண்டியா, ராகுல் மீது போலீசார் வழக்குப்பதிவு…

ஜெய்ப்பூர்:-

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் ஹர்திக் பாண்டிரா, கே.எல்.ராகுல் ஆகியோர் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து இருந்தனர்.தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பிரபல இயக்குனர் கரண்ஜோகர் நடத்திய நிகழ்ச்சியில் அவர்கள் இந்த சர்ச்சை கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.

இது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதைத் தொடர்ந்து இருவரும் மன்னிப்பு கேட்டு இருந்தனர். ஆனாலும் இந்திய கிரிக்கெட் வாரியம் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. இருவரையும் சஸ்பெண்டு செய்தனர்.பின்னர் அவர்கள் மீதான சஸ்பெண்டு விலக்கிக் கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து ஹர்திக் பாண்டியா நியூசிலாந்தில் விளையாடி வரும் இந்திய அணியுடன் இணைந்தார். இதைப்போல ராகுல் இந்திய ‘ஏ’ அணியில் விளையாடி வருகிறார்.

இந்த நிலையில் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த ஹர்திக் பாண்டியா, ராகுல் மீது ராஜஸ்தான் மாநிலம் ஜோக்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.இந்த புகாரின் அடிப்படையில் இருவர் மீதும் ஜோக்பூர் போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்தனர். இதைப்போல அந்த நிகழ்ச்சியை நடத்திய கரண்ஜோகர் மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.