நாகப்பட்டினம்

பெண் குழந்தைகளை பாதுகாக்க நடப்பாண்டு ரூ.3.81 கோடி ஒதுக்கீடு – அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தகவல்…

நாகப்பட்டினம்:-

பெண் குழந்தைகளை பாதுகாக்க நடப்பாண்டு ரூ.3.81 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 41 பயனாளிகளுக்கு ரூ.22 லட்சத்து 89 ஆயிரத்து 500 மதிப்பிலான நவீன சக்கர நாற்காலிகளையும், சமூக நலத்துறை சார்பில் பெண்குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 352 பெண் குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஒரு பெண் குழந்தைக்கு தலா ரூ.25000 வீதம் மொத்தம் ரூ.88 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் வைப்புத் தொகைக்கான ஆணைகளையும், பள்ளிக்கல்வித்துறை சார்பில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 170 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு கல்வி ஒளிபரப்பிற்கான செட்டாப் பாக்ஸ்களையும் என 563 நபர்களுக்கு ரூ.1 கோடியே 15 லட்சத்து 39 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.சீ.சுரேஷ்குமார் தலைமை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசியதாவது:-

“பெண்கல்வியை மேம்படுத்தவும், பெண்சிசுக் கொலையை ஒழிக்கவும், ஆண்குழந்தைகளை மட்டுமே விரும்பும் மனப்போக்கை கட்டுப்படுத்தவும், சிறு குடும்ப முறையை ஊக்குவிக்கவும், 1992ம் ஆண்டு புரட்சித்தலைவி அம்மா அவர்களால் தொடங்கப்பட்ட சீரியத் திட்டம் தான் பெண்குழந்தை பாதுகாப்புத் திட்டம். ஆண்டு குடும்ப வருமானம், 72,000க்குள் உள்ள இரண்டு பெண் குழந்தைகள் மட்டும் உள்ள தாய்மார்கள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.

கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 7481 பெண் குழந்தைகளுக்கு ரூ.18 கோடியே 70 லட்சம் மதிப்பில் வைப்புத் தொகை பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. 2019-2020 ஆம் நிதியாண்டுக்கு மட்டும் 1524 பெண் குழந்தைகளுக்கு தலா ரூ.25,000 வீதம் வழங்கிட ரூ.3.81 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 170 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு செட்டாப் பாக்ஸ்கள் வழங்கப்படுகிறது. உலகத்தரத்திற்கேற்ப மிகச்சிறந்த கல்வியினை வழங்கி பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக விளங்குகிற தமிழக அரசு மாணவர்களின் நலன் கருதி கல்வித் தொலைக் காட்சியினை நடத்தி வருகிறது. அரசுப் பள்ளி ஆசிரியர்களைக் கொண்டு நடத்தப்படும் தொலைக்காட்சி, தமிழ்நாடு அரசின் கல்வி தொலைக்காட்சியாகும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரியால் பொருத்தப்பட்ட நகரும் வண்டிகள் வழங்கும் திட்டமானது 2018-2019 ஆம் நிதியாண்டிலிருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. தசை சிதைவு நோய் மற்றும் பக்கவாதத்தால் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட நபர்கள் இரண்டு கால்களும், இரண்டு கைகளும் செயலிழந்த நபர்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைவார்கள். பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி ஒன்றின் விலையானது ரூ.74,500 ஆகும்.

இன்றைய தினம் 21 நபர்களுக்கு இந்த சிறப்பு சக்கர நாற்காலியானது வழங்கப்படுகிறது.இவ்வாறாக அம்மாவின் வழியில் செயல்படும் தமிழக அரசானது, ஏழை எளிய மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பொதுமக்கள் அனைவரும் அரசின் நலத்திட்டங்களை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.

இந்த விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.இந்துமதி, நாகப்பட்டினம் சார் ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர், மாவட்ட சமூக நல அலுவலர் உமையாள், சிக்கல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவர் தங்க.கதிரவன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்(பொ) சந்திரமோகன், தனித்துணை ஆட்சியர்(ச.பா.தி) எம்.வேலுமணி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.