தற்போதைய செய்திகள்

பெண் சமுதாயம் முன்னேற்றம் அடைவதற்கு மத்திய அரசு திட்டங்களை பெற்று தருவேன் – ப.ரவீந்திரநாத்குமார் எம்.பி. உறுதி…

மதுரை:-

பெண் சமுதாயம் முன்னேற்றம் அடைவதற்கு மத்திய அரசு திட்டங்களை பெற்று தருவேன் என்று ப.ரவீந்திரநாத்குமார் எம்.பி. கூறினார்.

தேனி நாடாளுமன்ற தொகுதியில் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ப.ரவீந்திரநாத்குமார் கடந்த சில நாட்களாக வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார். நேற்று அவர் மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் சோழவந்தான் தொகுதி மதுரை மேற்கு ஒன்றியத்தில் உள்ள தச்சம்பத்து, சமயநல்லூர், தேனூர், சிறுவாலை ஆகிய பகுதியில் உள்ள வாக்காளருக்கு நன்றி கூறினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

பெண்கள் நாட்டின் கண்கள் என்பார்கள். அந்த பெண் சமுதாயத்திற்கு அம்மா அவர்கள் தொட்டில் குழந்தை திட்டம், கர்ப்பிணி பெண்களுக்கு 18 ஆயிரம் நிதியுதவி, தாய்மார்களுக்கு விலையில்லா மிக்சி கிரைண்டர், மின்விசிறி போன்ற எண்ணற்ற திட்டங்களை வழங்கினார். மேலும் அவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய மகளிர் சுய உதவி குழுக்கள் அமைத்தார்.

மாநில அரசின் திட்டங்களை போல் மத்திய அரசிடம் பெண்கள் சமுதாய முன்னேற்றம் அடைவதற்கு பல திட்டங்களை பெற்றுத் தருவேன். அது மட்டுமல்லாது சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி பெற்றுத் தருவேன். தேனி நாடாளுமன்றத் தொகுதியை ஒரு தன்னிறைவு பெற்ற தொகுதியாக மாற்றி காட்டுவேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கே.மாணிக்கம், மதுரை மேற்கு ஒன்றிய கழக செயலாளர் முருகேசன், அலங்காநல்லூர். ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், மதுரை மேற்கு ஒன்றிய துணை செயலாளர் திருநாவுக்கரசு மற்றும் டாக்டர் பாவாடியான் உள்பட பலர் உடன் சென்றனர்.