சிறப்பு செய்திகள்

பெரியாறு அணையிலிருந்து 18-ந்தேதி முதல் 120 நாட்கள் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு – முதலமைச்சர் உத்தரவு

சென்னை:-

பெரியாறு அணையிலிருந்து 18-ந்தேதி முதல் 120 நாட்கள் தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தேனி மாவட்டத்தில் உள்ள பெரியாறு அணையிலிருந்து கம்பம் பள்ளத்தாக்கிலுள்ள பி.டி.ஆர் மற்றும் தந்தை பெரியார் வாய்க்கால்களின் கீழ் உள்ள ஒருபோக பாசன நிலங்களுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, பெரியாறு அணையிலிருந்து கம்பம் பள்ளத்தாக்கிலுள்ள பி.டி.ஆர் மற்றும் தந்தை பெரியார் வாய்க்கால்களின் கீழ் உள்ள ஒருபோக பாசன நிலங்களுக்கு பெரியாறு அணையிலிருந்து வினாடிக்கு 100 கன அடி வீதம் பாசனத்திற்காக 18.10.2019 முதல் 120 நாட்களுக்கு மொத்தம் 1037 மி.க.அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.

இதனால், தேனி மாவட்டம், தேனி வட்டம் மற்றும் உத்தமபாளையம் வட்டங்களில் உள்ள 5146 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.