தற்போதைய செய்திகள்

பெருங்காமநல்லூரில் தியாகிகள் நினைவு மணிமண்டபம் – அமைச்சர்கள் ஆலோசனை

மதுரை,

மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் பெருங்காமநல்லூரில் தியாகிகள் நினைவு மணிமண்டபம் அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தலைமையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம் பெருங்காமநல்லூரில் தியாகிகள் நினைவு மணிமண்டபம் அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தலைமையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட குற்றப்பரம்பரை சட்டம், கைரேகை சட்டத்தை எதிர்த்தும் 1920ஆம் ஆண்டு பெருங்காமநல்லூர் கிராமத்தில் நடந்த போராடத்தின்போது பிரமலை கள்ளர் சமுதாயத்தை சேர்ந்த 16 சுதந்திரப் போராட்ட வீரர்களை சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களின் வீரத்தை பறைசாற்றும் விதமாக அவர்கள் சுட்டு கொல்லப்பட்ட இடத்தில் நினைவு மணிமண்டபம் கட்ட வேண்டுமென பிரமலை கள்ளர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர்.

அதனை பரிசீலனை செய்த முதலமைச்சர் 18.03.2019 அன்று நடந்த சட்டசபை கூட்டத்தில் 110 விதியின் கீழ் தியாகிகளின் தியாகத்தை போற்றும் வகையில் நினைவு மணிமண்டபம் கட்டப்படும் என அறிவித்தார். அதனை தொடர்ந்து மணிமண்டபம் கட்டுவதற்கான இடம் தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் நேற்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தலைமையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் முன்னிலையில் பெருங்காமநல்லூர் தியாகிகள் நினைவு மணிமண்டப பொதுநல சங்க நிர்வாகிகளுடன் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கூடிய விரைவில் நினைவு மணிமண்டபம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டவுடன் மணிமண்டபம் கட்டுவதற்கான திட்ட மதிப்பீடு அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டு அனுமதி கிடைத்தவுடன் அதற்கான பணிகள் நடைபெறும் என அமைச்சர்கள் தெரிவித்தனர்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டி.ஜி.வினய், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.வி.ராஜன் செல்லப்பா(மதுரை வடக்கு), கே.மாணிக்கம் (சோழவந்தான்), எஸ்.எஸ்.சரவணன் (மதுரை தெற்கு), முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் முத்துராமலிங்கம், தமிழரசன், அண்ணாதுரை, மாவட்ட வருவாய் அலுவலர் பி.செல்வராஜ், உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(நிலம்) அமர்நாத், மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.எஸ்.பாண்டியன், வருவாய்த்துறையை சேர்ந்த அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தின் போது பேரையூர் வட்டம் பெருங்காமநல்லூரில் தியாகிகள் நினைவு மணிமண்டபம் கட்டுவதற்கான இடத்தினை தேர்வு செய்வதற்காக வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு செய்தார்.