சிறப்பு செய்திகள்

பெருங்காமநல்லூர் தியாகிகளுக்கு துணை முதலமைச்சர் மரியாதை…

மதுரை:-

மதுரை மாவட்டத்தில் உள்ள பெருங்காமநல்லூரில் கைரேகைச் சட்டத்தை எதிர்த்து உயிர்நீத்த தியாகிகளுக்கு 100ம் ஆண்டு நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு தியாகிகளின் நினைவுத்தூணுக்கு மரியாதை செய்தார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதியில் 1911-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஏகாதிபத்தியத்தால் விதிக்கப்பட்ட கைரேகை சட்டத்தை எதிர்த்து போராடினர். இதன் உச்சகட்டமாக 1920-ம் ஆண்டு ஏப்ரல் 3ம்தேதி பெருங்காமநல்லூர் கிராமத்தில் ஆங்கிலேய அரசுக்கு எதிராக இதற்காக போராடிய ஒரு பெண் உள்பட 16 பேரை ஆங்கிலேய அரசு சுட்டுக்கொன்றது. இதனையொட்டி அந்த தியாகிகளின் நினைவு போற்றும் வகையில் பெருங்காமநல்லூரில் அவர்களுக்காக நினைவுத்தூண் வைக்கப்பட்டுள்ளது.

இதனையொட்டி ஆண்டு தோறும் ஏப்ரல் 3ம்தேதி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றனது. இதனை தொடர்ந்து முதலமைச்சர் சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் இந்த தியாகிகளின் 100 ஆண்டுகள் நினைவாக ஒரு நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவித்தார்.

அதன்படி மதுரை மாவட்டத்தில் உள்ள பெருங்காமநல்லூர் தியாகிகளின் நினைவுத்தூணுக்கு கழகத்தின் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கினார். உசிலம்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பா.நீதிபதி முன்னிலை வகித்தார். தியாகிகளின் நினைவுத்தூணுக்கு மலர்வளையம் வைத்து கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் அஞ்சலி செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, மதுரை புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் ராஜன்செல்லப்பா, தேனி நாடாளுமன்ற வேட்பாளர் ப.ரவீந்திரநாத்குமார், மதுரை நாடாளுமன்ற வேட்பாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன், விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் அழகர்சாமி, ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் லோகிராஜன் ஆகியோரும் மரியாதை செய்தனர்.