தற்போதைய செய்திகள்

பெற்றோரை இழந்து தவித்த 3 சிறுமிகளுக்கு அமைச்சர் எம்.மணிகண்டன் உதவி…

ராமநாதபுரம்:-

பெற்றோரை இழந்து தவித்த 3 சிறுமிகளுக்கு சொந்த பணத்தில் இருந்து நிதி உதவி செய்ததோடு, அவர்களில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன் நடவடிக்கை எடுத்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் எட்டிவயல் கிராமத்தை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் சில வருடங்களுக்கு முன்பு மதுரை-ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை விபத்தில் உயிரிழந்தார். அதன் பின் அவரது மனைவி கண்ணகி தனது மூன்று பெண் குழந்தைகளையும் தனது பாதுகாப்பில் வளர்த்து வந்தார்.தனது தந்தையை இழந்த மூன்று சிறுமிகளும் சிரமப்பட்டு படித்து வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பணிக்கு செல்லும் போது முத்துக்குமாரின் மனைவி கண்ணகியும் சாலை விபத்தில் பலியானார். தனது தந்தை இழந்த சோகத்தில் தவித்து வந்த சிறுமிகளுக்கு தாய் இறந்த துக்கம் மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தனது பெற்றோர்களை இழந்து தவித்து வந்த சிறுமிகள் கமலி,ரம்யா,சுபிட்ஷா ஆகிய மூவரும் தனது உறவினர் ஒருவரின் பாதுகாப்பில் வளர்ந்து வந்தனர்.இந்த தகவல் அறிந்த தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன் மூன்று சிறுமிகளையும் தனது இல்லத்திற்கு அழைத்து வரக்கூறி தாய் தந்தையை இழந்து வாடிய சிறுமிகளுக்கு ஆறுதல் கூறி தேற்றினார். மேலும் இரண்டு சிறுமிகளின் கல்வி செலவையும் ஏற்றுக்கொண்டதோடு கமலி என்ற மூத்த பெண்ணுக்கு அரசு வேலை வழங்க மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தார்.

மூத்த பெண்ணிடம் தங்கைகளுக்கு தாயாக இருந்து கவனித்து கொள்ள வேண்டும்,நன்றாக பாதுகாக்க வேண்டும் என அறிவுரை வழங்கியதோடு தனது சொந்த பணத்தில் இருந்து நிதியுதவியை வழங்கினார். அமைச்சரின் இச்செயல் சிறுமிகளின் உறவினரையும் அருகில் இருந்தவர்களையும் மனம் நெகிழச்செய்தது. இதனை அறிந்த பலரும் அமைச்சரை வாழ்த்தினர். மூன்று சிறுமிகளும் அமைச்சருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.