தற்போதைய செய்திகள்

பொங்கலுக்கு மறுநாள் மாணவர்கள் பள்ளிக்கு வரும்படி உத்தரவு இல்லை – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவிப்பு

சென்னை

பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் பிரதமர் மோடியின் கலந்துரையாடல் பேச்சை கேட்பதற்காக மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்ற எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் பிரதமர் நரேந்திர மோடி பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி தூர்தர்ஷன் தொலைக்காட்சி மற்றும் வானொலியில் நேரடியாக ஒளிபரப்பப்பட உள்ளது. தமிழகத்தில் இருந்து இந்த நிகழ்ச்சியில் 66 மாணவர்கள் பங்குபெற உள்ளனர்.

அன்றைய தினம் நடைபெறவுள்ள நிகழ்ச்சிகளை அனைத்து வகை பள்ளிகளிலும் படிக்கும் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தவறாமல் பார்க்க வேண்டும் என்று தமிழக கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதற்காக பள்ளிகளில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளதாக கூறப்பட்டது. எனவே அன்றைய தினம் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அரசு விடுமுறை (திருவள்ளுவர் தினம்) ரத்து செய்யப்படுமோ என்ற சந்தேகம் எழுந்தது.

இது பற்றி பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறும்போது, பொங்கலுக்கு மறுநாளான ஜனவரி 16-ந்தேதி மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று கூறினார். அன்று மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டிய கட்டாயம் இல்லை. பிரதமர் மோடியின் பேச்சை மாணவர்கள் வீட்டில் இருந்தே கேட்டுக்ெகாள்ளலாம். விருப்பம் உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்றே சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம் அளித்தார்.