தற்போதைய செய்திகள்

பொதுமக்கள் மனு மீது விரைந்து நடவடிக்கை – அதிகாரிகளுக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் உத்தரவு

விழுப்புரம்

பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் உத்தரவிட்டார்.

விழுப்புரம் மாவட்டம் மயிலம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் முதலமைச்சரின் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அந்த மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரையிடம் வழங்கி உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை துறை வாரியாக பிரித்து சம்மந்தப்பட்ட துறை சார்ந்த மாவட்ட அலுவலர்களிடம் வழங்கி அனைத்திற்கும் குறுகிய காலத்தில் நடவடிக்கை எடுத்து நிறைவேற்றிட உத்தரவிட்டார்.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் வானூர் சக்ரபாணி, விக்கிரவாண்டி முத்தமிழ்ச்செல்வன், கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங், திண்டிவனம் சார் ஆட்சியர் டாக்டர் எஸ்.அனு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மகேந்திரன், மாவட்ட ஆவின் தலைவர் பேட்டை முருகன், ஒன்றிய செயலாளர் சேகரன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் விஜயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.