சிதம்பரம்

பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிட உயர்நீதிமன்றம் மறுப்பு…

சென்னை:-

பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிட சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.

தமிழகத்தில் கடந்த மாதம் 18-ம் தேதி மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு நடைபெற்றபோது, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போட்டியிட்ட சிதம்பரம் தொகுதியில் உள்ள பொன்பரப்பி கிராமத்தில் வன்முறை சம்பவம் நடந்தது. பின்னர் அது சரி செய்யப்பட்டது.

இந்நிலையில், பொன்பரப்பியில் மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவிடக்கோரி சிதம்பரம் தொகுதி வாக்காளர் விஷ்ணுராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில், பொன்பரப்பி கிராமத்தில் தேர்தல் நாளன்று வன்முறை ஏற்பட்டதால், 275 பேர் வாக்களிக்கவில்லை என்றும், அங்கு மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

அவரது மனுவை பரிசீலித்த நீதிபதிகள், மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிட மறுத்து விட்டனர். 23-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் எப்படி மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவிட முடியும்? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு தேர்தல் வழக்காக தொடரும்படி மனுதாரருக்கு அறிவுறுத்தினர்.