தற்போதைய செய்திகள்

பொய்யான வாக்குறுதிகளை கூறி திமுக மக்களை ஏமாற்ற முடியாது – அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு…

திருப்பூர்:-

பொய்யான தேர்தல் அறிக்கையை கூறி ஸ்டாலின் மக்களை ஏமாற்ற முடியாது என்று தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசினார்.

ஈரோடு நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் வெங்கு ஜி.மணிமாறனை ஆதரித்து திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் கழக அமைப்புச் செயலாளரும், கால்நடை பராமரிப்புதுறை அமைச்சருமான உடுமலை கே. ராதாகிருஷ்ணன் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். இந்த நிகழ்ச்சிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். செல்வக்குமார சின்னையன் தலைமை தாங்கினார். காங்கேயம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உ.தனியரசு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.எஸ். என்.நடராஜ், பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் என்.பி.பழனிச்சாமி, பா.ம.க. மாநில துணை தலைவர் மணிகண்டன், திருப்பூர் மாவட்ட தே.மு.தி.க செயலாளர் முத்து வெங்கடேஷ், த.ம.கா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விடியல் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், காமராஜ் நகர், கார்த்திகை நகர், மா.பொ.சி. நகர், திருவள்ளூர் வீதி, லட்சுமி நகர், தாராபுரம் ரோடு, சத்யா நகர், மூர்த்தி ரெட்டி பாளையம், அய்யாசாமி நகர் துர்க்கை காலனி, அம்மன் கோயில் ஆகிய நகரப் பகுதிகள் மற்றும் சிவன்மலை, ரெட்டிபாளையம், கீரனூர், நத்தக்காட்டு வலசு, நத்தக்கடையூர், பாப்பினி, சாம்பவலசு, பொத்தியபாளையம் ஆகிய ஒன்றிய பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்று பொதுமக்கள் , வியாபாரிகளிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசியதாவது :-

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கழகம் தனித்தே 37 இடங்களில் வெற்றிபெற்றது. இப்போது மெகா கூட்டணியுடன் இருப்பதால் 40 தொகுதிகளிலும் கழகம் மிக அமோகமாக வெற்றிபெறும். தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பொய்யான தேர்தல் அறிக்கையை சொல்லி மக்களிடம் ஓட்டு வாங்கி விடலாம் என்று பகல் கனவு காண்கிறார். மக்களை ஏமாற்றுவதற்காகவே ஸ்டாலின் கட்சி நடத்துகிறார். 17 ஆண்டு காலம் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடத்திய போது அதில் திமுக அங்கம் வகித்தது. மத்திய அமைச்சரவையிலும் இடம்பெற்றிருந்தது.

தி.மு.க.வினர் நாட்டுக்காக எதையும் செய்தது கிடையாது. சாதித்ததும் கிடையாது. தி.மு.க.வினர் சாதித்தது என்னவென்றால் அவர்களது குடும்பத்துக்கு மட்டுமே லாபம் தேடிக்கொண்டது தான். குறிப்பாக காவேரி நீர் மேலாண்மை ஆணையமாக இருக்கட்டும், முல்லைப் பெரியாறு, மேகதாது, கச்சத்தீவு என எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் விட்டுக் கொடுத்தும், மறந்துவிட்டு செயல்பட்டதுதான் திமுகவின் நிலைப்பாடு.

தற்போது விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு திட்டத்தின் மூலம் ரூ. 304 கோடி வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ. 176 கோடி பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.128 கோடியை காப்பீடு நிறுவனம் மூலம் நாம் பெற வேண்டும். கண்டிப்பாக அனைத்து விவசாயிகளுக்கும் பணம் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். தி.மு.க.வினர் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்கக் கூடாது. விவசாய மண்டலமாக அறிவிக்க வேண்டுமென சொல்லி வருகின்றனர். ஆங்காங்கே போராட்டத்தையும் நடத்தி வருகின்றனர். மீத்தேன் எடுப்பது என்பது விவசாயிகளுக்கு விரோதமான ஒரு செயல். அதில் மாற்றுக் கருத்து எதுவும் இல்லை. மீத்தேன் எடுப்பதற்கு உரிமம் வழங்கியது திமுக. அதில் கையெழுத்திட்டது ஸ்டாலின் தான். மீத்தேன் திட்டத்தை தடுத்து தடை ஆணை கொண்டு வந்தவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். ஆதாயம் தேடும் கட்சி திமுக தான்.

தற்போது நமது முதலமைச்சரின் மேற்கொண்டுள்ள பிரச்சாரத்தை கலந்து கொள்ளும் மக்கள் கூட்டத்தைப் பார்த்து திமுகவினர் தங்களது பிரச்சாரத்தை முடித்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து கழகத்தின் ஆட்சி அமைய ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி கழக வேட்பாளர் வெங்கு ஜி.மணிமாறனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அதிக வாக்கு வித்தியாசத்தில் அமோகமாக வெற்றிபெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசினார்.