கோவை

பொய் பிரச்சாரங்களை மக்கள் நம்ப வேண்டாம் – பொள்ளாச்சி வி.ஜெயராமன் வேண்டுகோள்…

கோவை:-

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் கழக அரசை கவிழ்க்க சதி செய்து பரப்பப்படும் எதிர்க்கட்சிகளின் பொய் பிரச்சாரங்களை மக்கள் நம்ப வேண்டாம் என்று சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி வி.ெஜயராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் வி.பி.கந்தசாமியை ஆதரித்து கழக தேர்தல் பிரிவு செயலாளரும் சட்டமன்ற பேரவை துணை தலைவருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் சுல்தான்பேட்டை ஒன்றியம் உட்பட்ட செஞ்சேரிமலை மலைப்பாளையம் எம் ஜ.ஆர். நகர் நகரகளந்தை சந்தமநாயக்கன்பாளையம் பச்சார்பாளையம் செஞ்சேரி வடவள்ளி வாரப்பட்டி வடவேடம்பபுடி பகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது:-

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா ஆகியோரால் உருவாக்கப்பட்ட கழகத்தை யாராலும் அசைக்க முடியாது. மக்களுக்கு ஒரு பொற்கால ஆட்சியை அம்மா வழங்கினார். மக்களுக்கு தேவையான திட்டங்கள் மட்டுமல்லாது, அன்றாடம் தேவைப்படும் அனைத்து திட்டங்களையும் பார்த்து பார்த்து நாட்டு மக்களுக்கு செய்தார்.

தற்போது அந்த பொங்கல் தொகுப்புடன் சேர்த்து ஆயிரம் ரூபாய் பரிசாக மக்களுக்கு எடப்பாடியார் அரசு வழங்கி வருகிறது. மேலும் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு 2000 ரூபாய் வழங்கப்படும் திட்டத்தினை அறிவித்து வழங்கினோம். ஆனால், திமுகவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்தனர். நிச்சயம் இந்த தேர்தல் முடிந்த பின் கழக அரசு வழங்கும்.

தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்ந்து வருகிறது. சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்புமிக்க மாநிலமாக தமிழகம் உருவாகியுள்ளது. ஆனால் இன்றைக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுகவும், இன்னொரு பக்கம் நம்மிடமிருந்து பிரிந்து சென்ற துரோகிகளும் கழக அரசை கவிழ்க்க பல்வேறு பொய் பிரச்சாரங்களை செய்கின்றனர். இந்த இயக்கத்தை அழித்துவிட வேண்டுமென்ற எண்ணத்தில் தனியாக ஒரு இயக்கத்தை உருவாக்கியுள்ளனர். கழகத்திற்கு எதிராக தனிக்கட்சியோ, ஜாதிக்கட்சியோ தொடங்கியவர்கள் யாரும் உருப்பட்டதாக சரித்திரம் கிடையாது.

மக்கள் நலத்திட்டங்களை தடுக்க நினைக்கும் திமுகவிற்கு இந்த தேர்தலில் தக்க பாடம் புகட்டுங்கள். சூலூர் என்றுமே அண்ணா திமுகவின் கோட்டையாகதான் உள்ளது. சூலூர் தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர் வி.பி.கந்தசாமி ஒரு நல்ல மனிதர். அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியவர். நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து பணியாற்றுபவர். வி.பி.கந்தசாமிக்கு வாக்காளர்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றிபெற செய்ய வைக்க வேண்டும்.

இவ்வாறு கழக தேர்தல் பிரிவு செயலாளரும் சட்டமன்ற பேரவை துணை தலைவருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசினார்.

பிரசாரத்தின்போது பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன், முன்னாள் அமைச்சர்கள் செ.தாமோதரன், ப.வே.தாமோதரன், கழக பொதுக்குழு உறுப்பினர் எம்.கண்ணாயிரம், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன், கூட்டுறவு வங்கி தலைவர் கேசவராஜ் யு.சி.அருண்குமார், வழக்கறிஞர்கள் வெங்கடாச்சலம், பாலமுரளி கிருஷ்ணா, கிளை செயலாளர்கள் தேவராஜ், ராமசாமி, ஜெயச்சந்திரன், சோதிடர் முருகேசன், உமா, குப்புசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.