தற்போதைய செய்திகள்

பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் கவுன்சிலிங் விழிப்புணர்வு கருத்தரங்கம் – அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்…

சென்னை:-

தமிழ்நாடு சுயநிதி பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் கூட்டமைப்பு அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்கம் விரைவில் நடத்தவுள்ள ஆன்லைன் கவுன்சிலிங் குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கினை  சென்னையில் நடத்தியது.

“தொலைநோக்கு 2019” என்ற பெயரிலான இக்கருத்தரங்கை உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார். இதில் 500க்கும் மேற்பட்ட பெற்றோர்களும், மாணவர்களும் பங்கேற்றனர்.நடப்பாண்டு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் கவுன்சிலிங் முறையானது, அண்ணா பல்கலைக் கழகத்திலிருந்து அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்கத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இந்த ஆன்லைன் கவுன்சிலிங் குறித்த விழிப்புணர்வையும், செயல்முறைகளையும் விளக்கமாக எடுத்துரைக்கவும், பொறியியல் படிப்பதனால் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவும் இந்த மாபெரும் இலவசக் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சுயநிதி பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம், செயலாளர் டாக்டர்.பி. செல்வராஜ் ஆகியோரது முன்னிலையில், உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்கத்தின் ஆணையர் கே.விவேகானந்தர், ஐ.சி.டி அகாடமியின் செயல் துணைத்தலைவர் பி.அன்புதம்பி, இன்போஃஸிஸ் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுப் பிரிவின் துணைத் தலைவர் சுஜித் குமார் மற்றும் கே7 கம்ப்யூட்டிங் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி கே.புருஷோத்தமன் உள்ளிட்டோர் சிறப்புரை நிகழ்த்தினர்.

செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சுயநிதி பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம், துணை தலைவர் ஆர்.எஸ்.ரகுராம் மற்றும் செயலாளர் பி.செல்வராஜ் ஆகியோர் கூறுகையில் “பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு குறைந்து விட்டதாக ஒரு பரவலாக தகவல் நிலவி வருகிறது.

ஆனால் உண்மையில் 2017-2018 ஆம் ஆண்டில் 1,20,000 பொறியியல் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த எண்ணிக்கை சென்ற ஆண்டு, அதாவது 2018-19-ல் 25% உயர்ந்து சுமார் 1,50,000 பொறியியல் மாணவர்கள் வேலை வாய்ப்பினைப் பெற்றுள்ளனர். இந்த வளர்ச்சி விகிதம் வரும் ஆண்டு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிவில், மெக்கானிக்கல், இ.சி.இ, இ.இ.இ., கம்ப்யூட்டர் சயன்ஸ், ஐ.டி, பயோ மெடிக்கல், மெக்கட்ரானிக்ஸ், ஏரோனாட்டிக்கள் போன்ற பல்வேறு துறைகளிலும் ஏராளமான வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன .டி.சி.எஸ், சி.டி.எஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ, எச்.சி.எல், சிண்டல், ஹெக்சாவேர், கூகுள், எல்&டி, கேட்டர் பில்லர், ஐ.பி.எம்., ஜோஹோ, அக்சென்ச்சர் உள்ளிட்ட உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும், புதிதாக வெளிவரும் சிறந்த பொறியியல் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கி வருகின்றனர்.

வேலைவாய்ப்பு பிரச்சினை என்பது பொறியியல் படிப்பிலோ அல்லது பாடத்திட்டத்திலோ இல்லை. மாணவர்கள், பொறியியல் பட்டப்படிப்பின் போது அத்துறை சார்ந்த புதிய தொழில்நுட்பங்கள், அயல்நாட்டு மொழிகள், சாஃப்ட் ஸ்கில்ஸ் எனப்படும் மென்திறன்கள் போன்றவற்றையும் கற்றுக்கொண்டால் வேலை கிடைப்பது நிச்சயம்.12 ஆம் வகுப்பு முடித்த பின் மற்ற துறைகளை எடுத்து படிக்கும் மாணவர்களை விடவும், பொறியியல் மாணவர்களுக்குத்தான் நல்ல வேலையும் அதிக சம்பளத்திற்கான வாய்ப்பும் கிடைக்கிறது. எனவே பொறியியல் படிப்பை மாணவர்கள் நம்பிக்கையோடு படிக்கலாம்” என்று கூறினர்.

தமிழ்நாடு சுயநிதி பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் கூட்டமைப்பு தமிழகத்தில் 2014 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இதில் 343 தனியார் பொறியியல் கல்லூரிகளும், 37 கலை அறிவியல் கல்லூரிகளும் உறுப்பினர்களாக உள்ளது.