தற்போதைய செய்திகள்

பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு 25-ந்தேதி தொடக்கம் – அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவிப்பு…

சென்னை

பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வருகிற 25-ந்தேதி தொடங்கப்படும் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பொறியியல் மாணவர் சேர்க்கையின் முதல் கட்டமாக விண்ணப்பப்பதிவு மே 2-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை நடைபெற்றது. 2-வது கட்டமாக ஜூன் 3-ந்தேதி ரேண்டம் எண் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜூன் 7-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 46 மையங்களில் நடைபெற்று முடிந்தது. அதன் அடிப்படையில் தரவரிசை பட்டியல் 20-ந்தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக ஜூன் 25-ந்தேதி மாற்று திறனாளிகளுக்கான நேரடி கலந்தாய்வும், 26-ந்தேதி முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகளுக்கும், 27-ந்தேதி விளையாட்டு வீரர்களுக்கான நேரடி கலந்தாய்வும் சென்னை தரமணியில் உள்ள மைய பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள அரங்கில் நடைபெறும்.

தொழிற்பிரிவினருக்கு 26.6.2019 முதல் 28.6.2019 வரை அதே மைய பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த தொழிற்கூட வளாகத்தில் நேரடி கலந்தாய்வு நடைபெற உள்ளது.தரவரிசை பட்டியல் வெளியிட்ட பின்பாக சிறப்பு பிரிவை சேர்ந்த மாணவர்கள் எந்தெந்த தேதிகளில் கலந்தாய்வு மையத்திற்கு வருகை புரிய வேண்டும் என்பதை தனித்தனியாக அவர்கள் விண்ணப்பப் பதிவின் போது பதிவு செய்த கைபேசி எண்ணில் குறுஞ்செய்தியும், அவர்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு தகவலும் அனுப்பி வைக்கப்படும்.

மேலும் 3.7.2019 அன்று பொதுப்பிரிவு கலந்தாய்வு நடைபெறுவதில் எவ்வித மாற்றமும் இல்லை. இது தொடர்பாக மாணவர்களுக்கு சந்தேகம் இருப்பின் 044-22351014 மற்றும் 044-22351015 என்ற எண்ணிற்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை தொலைபேசியில் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.