தற்போதைய செய்திகள்

பொள்ளாச்சி சம்பவத்தில் குற்றவாளிகள் கைது : கழக அரசு மீது வீண்பழி சுமத்துவதா? எதிர்க்கட்சிகளுக்கு அமைச்சர் டி.ஜெயக்குமார் கண்டனம்…

சென்னை:-

பொள்ளாச்சி சம்பவத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட பின்னரும் கழக அரசு மீது வீண்பழி சுமத்துவதா? என்று எதிர்க்கட்சிகளுக்கு அமைச்சர் டி.ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழகத்தில்  மாலை கழகத்தின் தலைமையிலான கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கழக ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஸ் கோயல் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

இக்கூட்டம் முடிந்ததும் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எல்லாம் சுபமாகவும், சுமூகமாகவும் முடிந்தது. யார், யாருக்கு எந்த தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விரைவில் தலைமை அறிவிக்கும். நாடாளுமன்றம், சட்டமன்றம் அம்மாவின் அரசை பொறுத்தவரை இரு கண்கள் போன்றது. இதயம் என்பது நாடாளுமன்றம். கண்கள் என்பது சட்டமன்றம். எனவே இரண்டிலும் வெற்றி பெறுவோம். நாற்பதும் நமதே.

காங்கிரஸ் கட்சி ஒரு ஊழல் கட்சி. தமிழ்நாட்டிற்கு ராகுல் வருவது வெட்கக்கேடானது. சாபக்கேடானது. தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் தமிழினத்தை அழித்த கட்சிகள். இதனை எந்த தமிழர்களும் மறக்க மாட்டார்கள். அந்த சம்பவம் நெஞ்சிலே குத்திய ஈட்டியாக தமிழர்களின் உள்ளங்களில் உள்ளது. அதற்குரிய வெகுமதியை காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் தருவார்கள்.

பொள்ளாச்சி விவகாரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது. இதில் தவறு செய்தவர்கள் மீது இரும்புக்கரம் கொண்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இவர்களுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர அம்மாவின் அரசு நடவடிக்கை மேற்கொள்ளும். ஆளும் கட்சி மீது வேண்டுமென்றே தொடர்ச்சியாக திட்டமிட்டு வதந்திகள் பரப்பப்படுகிறது. எந்த விசாரணைக்கும் உத்தரவிட அரசு தயாராக உள்ளது.தற்போது இருக்கும் நிலையில் அம்மா எப்படி வெற்றி பெற்றார்களோ அதுபோல மகத்தான வெற்றிபெற வேண்டும் என்ற இலக்கோடு செயல்பட்டு வருகிறோம்.

இவ்வாறு அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.