தற்போதைய செய்திகள்

பொள்ளாச்சி- திண்டுக்கல் இடையே ரூ.3500 கோடியில் நான்கு வழி சாலை – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பணியை தொடங்கி வைத்தார்…

கோவை:-

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் பொள்ளாச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ரூ.3500 கோடி மதிப்பில் புதிய நான்கு வழி விரைவு சாலை அமைக்கும் பணியை கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் மாவட்ட கழக செயலாளரும், நகராட்சி நிர்வாகம் ஊரகவளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் துணைத்தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி, நாடாளுமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன், சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, மாவட்ட வருவாய் அலுவலர் இராமதுரை முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்ததாவது:-

தொழில் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் மக்கள் பெருக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகின்றது. எனவே மக்கள் பெருக்கத்திற்கு ஏற்ற வகையில் சிறப்பான திட்டமிடுதலுடன் சாலை போக்குவரத்தினை மேம்படுத்திட வேண்டும் என்ற புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கூற்றை மெய்பிக்கும் வகையில், தமிழகத்தில் சாலை மேம்பாட்டிற்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தனிக்கவனம் செலுத்தி, அதிகளவிலான நிதிகளை வழங்கி செயல்படுத்தி வருகிறார்கள்.
பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர, சாலை கட்டமைப்பு மேம்பாடு வழி வகுக்கிறது.

பொதுமக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு சிறந்த சாலைக் கட்டமைப்பு வசதிகள் பெரிதும் துணை புரிகின்றன.
அதனடிப்படையில், இன்று பொள்ளாச்சி, ஆச்சிப்பட்டியில், தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்தின் மூலம் பொள்ளாச்சி முதல் மடத்துக்குளம், பழனி, ஒட்டன்சத்திரம் வழியாக காமலாபுரம் வரையிலான சாலையை நான்கு வழிச்சாலையாக அமைக்கும் பணிக்காக பாரத்மாலா பிரோயஜனா திட்டம் 1 மூலம் மொத்த நீளம் 131.960 கி.மீ. ஆக இறுதி செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட பணிகள் மூன்று சிப்பங்களாக பிரிக்கப்பட்டு ஒப்பந்த புள்ளிகள் இறுதி செய்யப்பட்டு முதற் சிப்ப பணியான பொள்ளாட்சி முதல் மடத்துக்குளம் வரையிலான சுமார் 50.078 கி.மீ நீளமுள்ள 4 வழிச்சாலை பணியினை ரூ.1343 கோடி மதிப்பிற்கும், இரண்டாவது சிப்ப பணியான மடத்துக்குளம் முதல் ஒட்டன்சத்திரம் வரையிலான சுமார் 45.38 கி.மீ நீளமுள்ள 4 வழிச்சாலை பணியினை ரூ.1268 கோடி மதிப்பிற்கும், மூன்றாவது சிப்ப பணியான திண்டுக்கல் முதல் ஒட்டன்சத்திரம் வரையிலான சுமார் 36.505கி.மீ நீளமுள்ள 4 வழிச்சாலை பணியினை ரூ.1038 கோடி மதிப்பிற்கும் ஒப்பந்த பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு சாலை கட்டுமானம் மற்றும் நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்காக ரூ.3649 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 40 சதவீதம் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் 60 சதவீதம் தனியார் பங்களிப்போடு செயல்படுத்தப்பட உள்ளது.

இச்சாலை அமைப்பதன் மூலமாக மதுரையில் இருந்து கோயம்புத்தூர் செல்ல பயண நேரம் சுமார் 2 மணி நேரம் குறைவதோடு மட்டுமல்லாமல் வாகனங்களின் பராமரிப்பு செலவும் குறைக்கப்படும். இச்சாலை அமைந்தால் பிற மாவட்டங்களிலிருந்து பொள்ளாச்சி வழியாக கோயம்புத்தூர் வரும் பேருந்து பயணம் நேரம் குறையும். சரக்கு வாகனங்கள் அதிக அளவில் வந்து செல்ல முடியும். இதனால் வணிக ரீதியிலான முன்னேற்றம் அடையமுடியும். இதன்மூலம் பொதுமக்கள், வணிகர் அதிகஅளவில் பயனடைவார்கள்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செ.தாமோதரன், நகர கழக செயலாளர் தம்பி கிருஷ்ணகுமார், ஒன்றிய செயலாளர்கள் ஆர்.ஏ.சக்திவேல், முத்துக்கருப்பண்ணசாமி, தாமோதரன், மாவட்ட கழக துணை செயலாளர் என்.ஆர்.ராதாமணி, அம்மா பேரவை மாவட்ட செயலாளர் எஸ்.விஜயகுமார், சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் ஜேம்ஸ்ராஜா, மாவட்ட தொழிற்சங்க செயலாளர் பி.ஆர்.கே.குருசாமி, அமைப்பு சாரா ஓட்டு அணி மாவட்ட செயலாளர் ஓ.கே.முருகன், கழக நிர்வாகிகள் வால்பாறை அமீது, மயில்கணேசன், ஜி.கே.சுந்தரம், கார்த்திக் அப்புசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.