சிறப்பு செய்திகள்

பொள்ளாச்சி வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம் – தமிழக அரசு உத்தரவு…

சென்னை:-

பொள்ளாச்சி கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜோதி நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த நாகேஸ்வரராவ் என்பவரது மகன் சபரிராஜன். என்ஜினீயரிங் படித்துள்ளார். இவரும், பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி ஒருவரும் முகநூல் மூலம் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 12-ந்தேதி அந்த மாணவியை சபரிராஜன் தொடர்பு கொண்டு ஊஞ்சவேலாம்பட்டிக்கு வருமாறு அழைத்தார். அங்கு சபரிராஜன் அவரது நண்பர்களான திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார் ஆகியோருடன் காத்திருந்தார்.

பின்னர் மாணவி வந்ததும் அவரை காரில் ஏற்றிக் கொண்டு தாராபுரம் ரோட்டில் சென்றனர். சிறிது தூரம் சென்றதும் சபரிராஜன் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதை சதீஷ் செல்போனில் படம் பிடித்தார். அப்போது அந்த மாணவியிடம் இருந்து பணத்தையும், சங்கிலியையும் பறித்துக் கொண்டு இது பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டி இறக்கி விட்டுள்ளனர்.

இச்சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த மாணவி பெற்றோரிடம் நடந்ததை கூறினார். அதைத்தொடர்ந்து பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலையத்தில் மாணவி புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் தான் போலீசார் அவர்கள் நால்வரையும் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது என்பது குறித்து தமிழக டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் சார்பில் தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அரசாணையில் கூறியிருப்பதாவது:-

பொள்ளாச்சியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் கோவை காவல்துறையிடம் கொடுத்துள்ள புகாரில் தன்னை ஒரு கும்பல் ஏமாற்றி காரில் அழைத்து சென்று ஆபாச வீடியோ எடுத்து தன்னிடம் இருந்த ஒரு பவுன் நகை, ரூ.20 ஆயிரம் ஆகியவற்றை பறித்து சென்று விட்டது. இது குறித்து பொள்ளாச்சி காவல் நிலையத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த கும்பல் மேலும் சில பெண்களை ஏமாற்றி ஆபாசமாக படமெடுத்து பணம் பறித்ததாகவும் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இது தொடர்பாக சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 4 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை செவ்வாய்கிழமை அன்று சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து ஐ.ஜி. ஸ்ரீதர், பெண் போலீஸ் சூப்பிரெண்டு நிஷா ஆகியோர் பொள்ளாச்சிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். வன்கொடுமை நடந்ததாக கூறப்படும் வீட்டிலும் விசாரணை நடத்தப்பட்டது. இருப்பினும் இந்த வழக்கில் உண்மை குற்றவாளிகள் அனவைரையும் கைது செய்ய வேண்டும் என்றும், அதற்காக வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று அரசு கருதியது.

இந்த நிலையில் இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றி தமிழக அரசு  அரசாணை ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில் பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக பொள்ளாச்சி கிழக்கு போலீசாரும், அதனைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசும் விசாரணை நடத்திய நிலையில் இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பாலியல் விவகாரம் தொடர்பாக பொள்ளாச்சி கிழக்கு போலீசாரிடம் இருந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆவணங்களை பெற்று வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண் காவல் துறையிடம் கொடுத்த புகாரில் தன்னை சிலர் ஏமாற்றி காரில் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததோடு, தன்னிடம் இருந்த 20 ஆயிரம் ரூபாயையும், தங்கச்சங்கிலியையும் பறித்து சென்று விட்டார்கள். திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகிய நால்வரும் இந்த சம்பவத்துக்கு முக்கிய குற்றவாளிகளாக கருதப்படுகிறார்கள். இவர்களை உடனடியாக கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொள்வதாக அந்த புகாரில் சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவி குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று புகார் கொடுத்துள்ள சம்பந்தப்பட்ட மாணவியின் சகோதரரை குற்றவாளிகள் தாக்கி காயப்படுத்தியதாகவும் அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது. முதலில் போலீசார் சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகிய மூவரையும் கைது செய்தனர். பின்னர் திருநாவுக்கரசு என்பவரையும் கைது செய்து காவலில் வைத்துள்ளனர். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.யிடம் இருந்து சி.பி.ஐ.க்கு மாற்ற தமிழக அரசு ஆணை பிறப்பித்ததன் பேரில் இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் கோவை எஸ்.பி. சி.ஐ.டி.க்கு முழு தகவல்களையும் தெரிவிக்கலாம். அவர்களுடைய பெயர்கள் பாதுகாப்பாகவும், ரகசியமாகவும் வைத்திருக்கப்படும். இந்த வழக்கில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நீதியின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை பெற்றுத் தரப்படும்.

இந்த வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க தமிழக ஆளுநர் பன்வாரிலாலும் ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் குற்றவாளிகள் மீதான பிடி இறுகுகிறது. யாரும் தப்பிக்க முடியாது.