தற்போதைய செய்திகள்

போக்குவரத்துத்துறை தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்

கரூர்

போக்குவரத்துத்துறை தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

தமிழகத்தில் தீபாவளி திருநாளை முன்னிட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்  கரூரில் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் வழிகாட்டுதலோடு நடைபெற்று வரும் நல்லாட்சியில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தீபாவளி திருநாளை முன்னிட்டு போக்குவரத்துத்துறையை சேர்ந்த 1,36,619 தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதற்கென்று ரூ.206.52 கோடி நிதியினை முதலமைச்சர் ஒதுக்கீடு செய்துள்ளார். அதிகபட்சமாக ரூ.16,800வரை போனஸ் தொகை வழங்கப்படவுள்ளது. நாளை முதல் 20 சதவீத போனஸ் அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்கப்படும்.

தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்து கழகங்களிலும் போக்குவரத்துத்துறை தொழிலாளர்களுக்கு இன்று முதல் தீபாவளி முன்பணம் வழங்கப்படும். அதேபோல தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றது. தீபாவளி பண்டிகைக்காக வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளோடு சேர்த்து சுமார் 21,586 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

மேலும், குறைந்த தூரம் செல்லக்கூடிய மூன்று மற்றும் இரண்டு இருக்கைகள் கொண்ட குளிர்சாதன வசதியுடன் கூடிய பேருந்துகளை முதலமைச்சர் ஏற்கனவே துவக்கி வைத்துள்ளார். தற்போது கூடுதலாக பேருந்துகளுக்கான கூண்டு கட்டும் பணி முடிவடைந்தவுடன் அந்த அந்த போக்குவரத்து கழகத்தில் இயக்கப்பட உள்ளது.

விரைவு போக்குவரத்து கழகங்களில் இயக்கப்பட்டு வந்த குளிர்சாதன பேருந்து முதலமைச்சரின் பொற்கால ஆட்சியில் அனைத்து போக்குவரத்து கழகங்களிலும் குளிர்சாதன வசதியுடன்கூடிய பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. பொதுமக்கள் குறைந்த கட்டடணத்தில் நிறைவாகப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் குளிர்சாதன பேருந்துகளுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு ரூபாய் என்ற அடிப்படையில் வசூலிக்கப்படுகிறது.

பேருந்துகளுக்கு கூடு கட்டும் பணி முடிவுற்று, பதிவு செய்தபிறகு தமிழகத்தில் உள்ள அனைத்து போக்குவரத்து கழங்களிலும் குளிர்சாதன வசதியுடன் கூடிய பேருந்துகள் இயக்கப்படும். தமிழகத்தில் மொத்தம் 150 குளிர்சாதன பேருந்துகள் இயக்கப்படும். இதில் சென்னை மாநகரத்தில் 50 குளிர்சாதன பேருந்துகள் (ரெட் பஸ்கள்) இயக்கப்படும்.

ஏற்கனவே, குளர்சாதன வசதியுடன் கூடிய பேருந்துகள் சோதனை ஓட்டமாக திருவண்ணாமலை முதல் சென்னை வரையும் திருநெல்வேலியிலும் இயக்கி பார்க்கப்பட்டது. இதில், பயணிகளிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. முதலமைச்சர் அதிகப்படியான பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இன்னும் இரண்டாயிரம் பேருந்துகளை வாங்கி பயன்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

வெகு விரைவில் அந்த பேருந்துகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இயக்கப்படும். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களிடம் அதிக கட்டணம் வசூல் செய்யும் தனியார் பேருந்து உரிமையாளர்களின் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.