திருவண்ணாமலை

போளூர் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு – பெற்றோர்கள் ஆர்வமுடன் வருகை…

திண்ணாமலை:-

போளூர் பகுதி அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதால் பெற்றோர்கள் ஆர்வத்துடன் வந்து சேர்க்கை விண்ணப்பம் வாங்கி செல்கின்றனர்.

தமிழக அரசு தனியார் பள்ளிகளை போல் அரசு பள்ளிகளும் இயங்கி வரும் அளவிற்கு ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். அரசு திட்டங்களும் சிறப்பாக உள்ளது. மாணவர்களுக்கு தேவையான அனைத்து பாடப்புத்தகங்கள் ,மடிகணினி, இலவச சைக்கிள், இலவச சீருடைகள், உட்பட மாணவர்களுக்கு படிப்பதற்கு தேவையான பல்வேறு உபகரணங்கள் வழங்கப்படுகிறது. மாணவர்கள் படிப்பதற்கு தேவையான பொருட்கள் அரசு வழங்குவதால் பெற்றோர்களும் அரசு பள்ளியில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க ஆர்வமாக உள்ளனர். இதனால் தனியார் பள்ளி மாணவர்கள் இந்த கல்வி ஆண்டில் அரசு பள்ளியை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

போளூர் தாலூகா சாணாரபாளையம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் பள்ளி வளர்ச்சி, மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதம், அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்த போது அங்கு போளூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இருந்து மாணவர்கள் அரசுப் பள்ளியை நோக்கி ஆர்வமாக வந்து சேர்ந்தனர்.

அப்போது அங்கு ஆய்வு செய்து கொண்டிருந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாணவர்களை வரவேற்று பள்ளியில் சேர்ப்பதற்கான விண்ணப்பத்தை வழங்கி அவர்களை அனுமதி பெற செய்தார். மேலும் தனியார் பள்ளியில் இருந்து குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்பதற்காக விண்ணப்பத்தை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களிடமிருந்து ஒரு பெற்றோர் வாங்கிச் சென்றனர். பள்ளி தலைமையாசிரியர் சி.கருணாகரன் வரவேற்றார்.