இந்தியா மற்றவை

ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. காவலில் விசாரிக்க சி.பி.ஐ. நீதிமன்றம் அனுமதி…

புதுடெல்லி

ஐ.என்.எஸ். மீடியா வழக்கில் முன் ஜாமீன் மறுக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று  சிதம்பரம் வீட்டில் தேடுதல் நோட்டீசை சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையினர் ஒட்டினர். அவர் பத்திரிகையாளர்களை சந்தித்து விட்டு இரவு வீடு திரும்பினார். பின்னர் அவரை கைது செய்வதற்காக சி.பி.ஐ. அதிகாரிகள் வீட்டிற்கு சென்றனர். நீண்ட நேரம் கதவை தட்டியும் கதவு திறக்கப்படாத நிலையில் சி.பி.ஐ. அதிகாரிகள் சுவர் ஏறி குதித்து ப.சிதம்பரத்தை கைது செய்தனர்.

இரவு 11 மணி வரை விசாரணை நடத்திய பின்னர்  மீண்டும் காலையில் விசாரணை நடத்தினார்கள். பின்னர் மாலை 4 மணி அளவில் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்காக கபில் சிபில், அபிஷேக் சிங்வி முதலிய மூத்த வழக்கறிஞர்கள் வாதாடினார்கள். சிதம்பரமும் தனது தரப்பு வாதத்தை நீதிபதியிடம் தெரிவித்தார். அவருக்கு ஜாமீன் கொடுக்கக்கூடாது என்று சி.பி.ஐ. தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஒரு மணி நேரம் கழித்து தனது தீர்ப்ைப வாசித்தார். மாலை 6.30 மணி அளவில் நீதிபதி தீர்ப்பு கூறுகையில், சிதம்பரத்துக்கு 26-ந்தேதி வரை 5 நாள் சி.பி.ஐ. காவல் வழங்குவதாகவும், 5 நாட்கள் அவரை காவலில் எடுத்து சி.பி.ஐ. விசாரிக்க அனுமதி அளிப்பதாகவும் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து ப.சிதம்பரம்  நேரடியாக சி.பி.ஐ. அலுவலகத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்குள்ள தனி அறையில் அவர் தங்க வைக்கப்பட்டு இரவு வரை விசாரணை நடைபெற்றது. பின்னர் அவர் தூங்குவதற்கு சி.பி.ஐ. அதிகாரிகள் அனுமதி அளித்தனர். விசாரணை இன்று முதல் 5 நாட்களுக்கு நடைபெறும். அதுவரை அவர் சி.பி.ஐ. காவலில் இருப்பார்.