தற்போதைய செய்திகள்

மகிழ்ச்சியான மனநிலையில் இருந்தால் ஆரோக்கியமான குழந்தைகள் பிறக்கும் – கர்ப்பிணிகளுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவுரை…

மதுரை:-

கர்ப்பிணிகள் மகிழ்ச்சியான மனநிலையில் இருந்தால் குழந்தைகள் ஆரோக்கியமாக பிறக்கும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவுரை வழங்கியுள்ளார்.

மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு அம்மா தாய், சேய் நலப்பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.நடராஜன் தலைமையில் நடைபெற்றது.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கர்ப்பிணி பெண்களுக்கு தாய், சேய் நல பெட்டகத்தை வழங்கி பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் முதலமைச்சர் தலைமையில் செயல்படும் கழக அரசு பெண்களின் முன்னேற்றத்திற்காக எண்ணற்ற பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. உலத்திலேயே ஒரு உயிருக்கு உயிர் கொடுக்கும் பாக்கியம் தாய்க்கு மட்டும் தான் உண்டு. குழந்தைகளை உலகிற்கு அடையாளம் காட்டுபவள் தாய் ஒருவரே. அதனால் தான் குழந்தை பிறந்த உடன் அம்மா என்று அழைக்கிறது.

எனவே பிறக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை பற்றி சிந்திக்காமல் குழந்தை பிறக்கும் வரை கர்ப்பிணி தாய்மார்கள் மகிழ்ச்சியான மனநிலையில் இருக்க வேண்டும். அப்பொழுது தான் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும். குழந்தையை கருவில் சுமப்பதை சுமையாக கருதாமல் சுகமாக கருத வேண்டும். கடவுள் பெண்களுக்கு கொடுத்த வரமே தாய்மை.

தமிழக அரசு இந்தியாவிலேயே முதன் முறையாக கர்ப்பிணி தாய்மார்கள் மீது அக்கறை கொண்டு 2006-ம் ஆண்டு முதல் டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு நிதியுதவி வழங்கி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 01.06.2011 முதல் முதல் இரண்டு பிரசவங்களுக்கு ரூ.12000 வீதம், கர்ப்பிணி தாய்மார்களின் வங்கிக் கணக்கில் நிதிவரவு வைக்கப்பட்டு வந்தது. 01.04.2018 முதல் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த தொகை ரூ.12000 லிருந்து ரூ.18000 ஆக உயர்த்தி வழங்க அரசாணை பிறப்பித்து நிதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதியானது முதல் இரண்டு பிரசவங்களுக்கு மட்டுமல்லாமல், இரண்டு குழந்தைகளுக்கு மேற்பட்டு உள்ள தாய்மார்களுக்கும் நிதி வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

முன்னதாக பேரையூர் வட்டம், பி.ஆண்டிப்பட்டி கிராமத்தில் நியாயவிலைக்கடை புதிய சேவை மையத்தை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், சுகாதார பணிகள் துணை இயக்குநர் அர்ஜுன்குமார், வட்டார மருத்துவ அலுவலர் மரு.பாண்டியராஜன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.