தற்போதைய செய்திகள்

மக்களவை, சட்டமன்ற தேர்தலால் கழகத்திற்கு எந்த பின்னடைவும் இல்லை – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி…

சென்னை:-

மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலால் கழகத்திற்கு எந்த பின்னடைவும் இல்லை என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

ஒற்றை தலைமை குறித்து விரிவான அறிக்கையை தலைமை அளித்துள்ளது. இருந்த போதிலும் நீங்கள் கேள்வி கேட்ட காரணத்தினால் சில விளக்கத்தைத் தருகிறேன். தற்போது நடைபெற்ற தேர்தலில் ஒரு தவறான பிரச்சாரம் ஊடகங்களில் செய்யப்படுகிறது.

புரட்சித்தலைவர் காலத்திலும், புரட்சித்தலைவி அம்மாவின் காலத்தில் இரட்டைஇலை சின்னத்திற்கு மக்களின் ஆதரவு எப்படி இருந்தது என்று அந்த புள்ளி விபரங்களை நாம் ஒப்பிட்டுப் பார்த்தால் கடைசியாக 2016ல் அம்மா அவர்கள் மக்களைச் சந்தித்துப் பெற்ற வாக்குகளின் சதவீதம் 41.06. இப்போது முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் அனைவரும் ஒரு குடும்பமாக ஒன்றிணைந்து தேர்தலைச் சந்தித்து ஆட்சிக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் 38.2 சதவீதம் பெற்றுள்ளோம்.

அம்மா விட்டுச் சென்ற அரசை முதல்வர், துணைமுதல்வர் மற்றும் அமைச்சர்கள் கட்டி காப்பாற்றியதே மிகப்பெரிய சாதனை. நாங்கள் தான் அதிமுக என்று சொன்னவர்கள் வெறும் 5.5 சதவீத வாக்குகளை பெற்றுள்ளனர். அம்மா அவர்கள் இருக்கும் போது 41 சதவீதம் இருந்தது தற்போது 38 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளோம்.3 சதவீத வாக்குகள் மட்டுமே குறைந்துள்ளது.

மிகக்குறுகிய காலத்தில் எதிர்க்கட்சிகளை எல்லாம் சமாளித்து மக்களின் நம்பிக்கையைப் பெற்று முதல்வர் சரித்திர சாதனையைப் பெற்றுள்ளார். 41 சதவீதத்தில் ஆட்சி அமைத்தோம். இப்போது 38 புள்ளியில் இருக்கிறோம். 3 சதவீதம் என்பது மிகப்பெரிய பின்னடைவு இல்லை. சரிசெய்ய முடியாதது அல்ல. நிச்சயமாகச் சரி செய்ய முடியும்.மக்களின் நம்பிக்கையைப் பெற முடியும்.

அம்மாவின் கனவுத்திட்டங்களைத் தொடர்ந்து கொண்டுபோகும் போது அம்மா சட்டப்பேரவையில் கூறியது போல தொடர்ந்து அம்மாவின் அரசுதான் இருக்கும். நம்பிக்கையை ஏற்படுத்துகிற இந்த புள்ளி விபரங்களை ஊடகங்கள் மறைந்து மீள முடியாத தோல்வி என்று தெரிவித்து வருகிறது.1989 ல் கழகம் பிளவுப்பட்டபோது இரட்டை புறாவுக்கு வெறும் 15 சதவீதம் கிடைத்தது. அம்மா தலைமை தாங்கிய சேவல் சின்னத்திற்கு 27 சதவீதம் கிடைத்தது. இன்றைக்கு மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். எந்த குழப்பமும் இல்லை. அம்மா இல்லாமல் அதிமுகவைக் காப்பாற்றுவதே மிகப்பெரிய சாதனை.இது ஊடகங்களால் மறைக்கப்படுகிறது.

இந்த தேர்தலில் நாங்கள் தான் அதிமுக என்ற அங்கீகாரத்தைப் பெற்றுள்ளோம். மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளோம். ஆட்சி தொடர வேண்டும் என்ற அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார் முதல்வர். வலிமையான பிரதமர் வரவேண்டும். அம்மாவின் ஆட்சி தொடர வேண்டும் என்று முதல்வர் பிரச்சாரம் செய்தார். இப்போது முதல்வர் கூறியது போல் தான் நடந்துள்ளது. காமராஜருக்குப் பிறகு பிரதமரை வழி மொழிகிற பெருமையை நமது முதல்வர் பெற்றுள்ளார். சமானிய முதல்வராகச் செயல்பட்டு சாதனை படைத்துள்ளார்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.