தற்போதைய செய்திகள்

மக்களவை தேர்தலில் கழகம் அமோக வெற்றிபெற பசி நோக்காது- கண்துஞ்சாது பாடுபடுவோம் : கழக வழக்கறிஞர் மாவட்ட செயலாளர் கூட்டத்தில் அறைகூவல்…

சென்னை:-

வரும் நாடாளுமன்ற தேர்தலில் கழகம் அமோக வெற்றிறெ அயராது உழைப்பது என கழக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 71-வது பிறந்த நாள் விழாவை சிறப்பாகக் கொண்டாடுவது குறித்து கழக வழக்கறிஞர் பிரிவு மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் தலைமைக் கழகத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கழக வழக்கறிஞர் பிரிவுத் தலைவர் வி.எஸ். சேதுராமன் தலைமை தாங்கினார். செயலாளரும், கழக நாடாளமன்றக் குழு துணைத்தலைவரும், நாடாளுடமன்ற மாநிலங்களவை குழு தலைவருமான ஏ.நவநீதகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். தென்சென்னை வடக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் தாமல் டி. கண்ணா வரவேற்புரை ஆற்றினார்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தீர்மானம் : 1

கழக நிரந்தரப் பொதுச் செயலாளர், இதய தெய்வம், தங்கத் தாரகை, புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 71-வது பிறந்த நாளை வருகிற பிப்ரவரித் திங்கள் 24-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் கழக வழக்கறிஞர் பிரிவின் சார்பில் நீதிமன்ற வளாகங்களுக்கு வெளியில் நலத் திட்ட உதவிகள், அன்னதானம் மற்றும் இனிப்புகளை மாணவ செல்வங்களுக்கும், ஏழை, எளிய மக்களுக்கும் வழங்கி சிறப்பாகக் கொண்டாடுவது என்று கழக வழக்கறிஞர் பிரிவின் சார்பில் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் : 2

புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆசிபெற்ற, முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான கழக அரசு, தமிழ்நாட்டில் உள்ள நீதிமன்றங்களுக்கு தேவையான நிதியை, அம்மா வழங்கியது போல் வழங்கியுள்ள தமிழ்நாடு அரசுக்கு கழக வழக்கறிஞர் பிரிவு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் : 3 

மகத்தான நமது அம்மா அவர்களின் அருள் ஆசிபெற்று, இன்றைக்கு அவர்களது கொள்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் தொடர்ந்து வெற்றி பெறச் செய்ய இமை துஞ்சாமல் செயல்படும் முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி, துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய தலைவர்களின் கடும் உழைப்பிற்கு கழக வழக்கறிஞர்கள் பிரிவு தனது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் : 4 

நம்மையெல்லாம் ஆற்றொணாத் துயரத்தில் ஆழ்த்திவிட்டு விண்ணுலகம் சென்றுவிட்ட இதயதெய்வம், புரட்சித்தலைவி கழக நிரந்தரப் பொதுச் செயலாளர் அம்மா அவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் மணிமண்டபம் அமைத்திடவும், அம்மா அவர்கள் வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தினை நினைவு இல்லமாக மாற்ற ஆணையிட்ட முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு கழக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் சார்பில் நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் : 5 

பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா ஆகியோரது தன்னலமற்ற அயராத உழைப்பால், அறிவால், ஆற்றலால், தியாகத்தால் உருவான உண்மையான திராவிட இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான்.தமிழ்நாட்டின் உரிமைகளை நிலை நாட்டவும், உலகெங்கும் வாழுகின்ற தமிழர்களுக்கு உறுதுணையாய் இருக்கவும், தமிழ்நாட்டில் சமூக நீதி காக்கவும், அனைத்துத் தரப்பு மக்களும் வளர்ச்சி அடைந்திட வேண்டும் என்ற இலட்சியத்தோடு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் நடைபெற்று வருகிறது.

இந்த ஒளிவிளக்கு காலமெல்லாம் ஒளிரும் வண்ணம் கழகத் தொண்டர்கள் ஒவ்வொருவரும் கருத்தாகப் பணியாற்றிடவும், புரட்சித் தலைவி அம்மாவின் உண்மை விசுவாசிகளான கழக ஒருங்கிணைப்பாளர், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் தலைமையில் தீயசக்திகளின் சூழ்ச்சிகளுக்கு இடம் தராமல், விசுவாசமிக்க தொண்டர்களாக கழகப் பணிகளையும், மக்கள் பணிகளையும் தொடர்ந்து ஆற்றுவோம் என கழக வழக்கறிஞர் பிரிவு சார்பில் சூளுரை ஏற்கிறது.

தீர்மானம் : 6 

புரட்சித்தலைவி அம்மா 1 1/2 கோடி தொண்டர்களையும், இந்த ஆட்சியையும் தன் உயிரைக் கொடுத்து காப்பாற்றி உள்ளார்கள். “மக்களால் நான், மக்களுக்காகவே நான்” என்று வாழ்ந்து, தான் மறைந்த பின்னரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 100 ஆண்டுகள் ஆட்சி செய்யும் என்று சட்டமன்றத்திலே அம்மா அவர்கள் கூறிய அந்த வார்த்தைகளை எப்பொழுதும், எந்த சூழ்நிலையிலும், நாம் மனதிலே கொண்டு, நம் உள்ளத்திலே, நமது இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா! அம்மா! அம்மா! என்று எப்பொழுதும் நினைத்து கழகப் பணிகளை கடமை உணர்வோடு செய்வோம் என்று கழக வழக்கறிஞர் பிரிவின் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

தீர்மானம் : 7 

தமிழ் நாட்டில் உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் ரூ.3,50,000 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்கின்ற முதல்வர், துணை முதல்வர் மற்றும் தொழில்துறை அமைச்சருக்கு கழக வழக்கறிஞர் பிரிவின் சார்பில் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் : 8 

பொங்கல் திருநாள் பண்டிகைக்கு ரூ. 1000 அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தமிழகம் முழுவதும் வழங்கிய முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு கழக வழக்கறிஞர் பிரிவின் சார்பில் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறது.

தீர்மானம் : 9 

தமிழ் நாட்டில் மதுரையில் உலக தரம் வாய்ந்த எய்ம்ஸ் மருத்துவமனை அமைய நடவடிக்கை எடுத்த முதல்வர் மற்றும் துணைமுதல்வர் ஆகியோருக்கு கழக வழக்கறிஞர் பிரிவின் சார்பில் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் : 10 

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களுக்கு போர்கால அடிப்படையில் நிலைமையை உடனடியாக சீர் செய்ய பாடுபட்ட முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கும் கழக வழக்கறிஞர் பிரிவின் சார்பில் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் : 11 

காவேரி நதியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாதுவில் அணைகட்ட நடவடிக்கை எடுத்த கர்நாடக அரசுக்கு கண்டணம் தெரிவித்து, தடுத்த தமிழ்நாட்டு மக்களின் உரிமைக்காக பாடுபடும் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோருக்கு கழக வழக்கறிஞர் பிரிவின் சார்பில் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் : 12 

வருகின்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய 40 தொகுதிகளிலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி இமாலய வெற்றி கிடைத்திட கழகத்தின் சார்பில் போட்டியிடும் அனைவரையும் அமோக வெற்றி பெற செய்ய கழக வழக்கறிஞர்கள் சிறப்பாக பணியாற்றுவதென்று கழக வழக்கறிஞர் பிரிவின் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முடிவில் வடசென்னை வடக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் இ.பாலமுருகன் நன்றி கூறினார்.