வேலூர்

மக்களின் கோரிக்கைகளை இதயத்தில் ஏற்றி வைத்து நிறைவேற்றி வருகிறோம் – நடிகர் ரவி மரியா பேச்சு…

வேலூர்:-

மக்களின் கோரிக்கைகளை இதயத்தில் ஏற்றி வைத்து நிறைவேற்றி வருகிறோம் என்று நடிகர் ரவிமரியா கூறினார்.

வேலூர் நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து கே.வி.குப்பம் பகுதியில் முன்னாள் ராணுவ வீரர்கள் நல சங்கத்தினரிடம் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ, நடிகர் ரவி மரியா, கே.வி.குப்பம் சட்டமன்ற உறுப்பினர் லோகநாதன், அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் ரவி ஆகியோர் வாக்கு சேகரித்தனர்.

அப்போது நடிகர் ரவி மரியா பேசியதாவது:-

மக்களின் கோரிக்கைகளை தி.மு.க.வினர் கிடப்பில் போடுவார்கள். ஆனால் நாங்களோ எங்கள் இதயங்களில் ஏற்றி பதிய வைப்போம். ஏனென்றால் இதயங்களில் ஏற்றி வைக்கும் பதிவுகள் எந்த காலத்திலும் அழியாது.
பொதுவாக ராணுவ வீரர்கள் மதிக்கும் ஒரே இயக்கம் கழகம் மட்டும்தான். ராணுவ வீரர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அம்மா அரசு செய்து வருகிறது. வேலூர் நாடாளுமன்ற தொகுதியின் சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் புரட்சித்தலைவர் காலத்தில் இப்பகுதி மக்களுக்கு அடையாளம் காணப்பட்டார். தொடர்ந்து இப்பகுதி மக்களுக்கு பல்வேறு நன்மைகள் செய்து உள்ளார்.

ஸ்டாலின் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது மேலே ராகுல் கீழே ஸ்டாலின் என்று கூறி மாதம் 6000 ரூபாய் வீதம் ஆண்டுக்கு 72,000 ரூபாய் தருவோம் என்று கூறி மக்களை நம்ப வைத்து ஏமாற்றி வாக்கு சேகரித்தார். ஆனால் அந்த பணம் மக்களுக்கு கிடைத்ததா? தற்போது மக்களுக்கு நாமம் சாத்தி விட்டார் ஸ்டாலின். நாமம் என்றால் அனைவருக்கும் நினைவு வருவது72,000 ரூபாய் தான். திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டசபையில் வெளிநடப்பு மட்டும் செய்து விட்டு மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. அதே போல தான் நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்து வருகின்றனர். இவர்களுக்கு தக்க பாடம் புகட்டுங்கள்.

இவ்வாறு நடிகர் ரவிமரியா பேசினார்.