தற்போதைய செய்திகள்

மக்களின் வாழ்வு சிறக்க கழக கூட்டணியை ஆதரிப்பீர் – திருப்பூரில் ஜி.கே.வாசன் பிரசாரம்…

திருப்பூர்:-

தி.மு.க. கூட்டணி மக்கள் வெறுக்கும் கூட்டணி என்றும், மக்களின் வாழ்வு சிறக்க அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று திருப்பூரில் ஜி.கே.வாசன் பிரச்சாரம் செய்து பேசினார்.

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் கழக வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தனை ஆதரித்து த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் திருப்பூர், அனுப்பர்பாளையம் பகுதியில் வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:- 

கழக ஆட்சியின் போது பல்வேறு திட்ட பணிகள் திருப்பூருக்கு நிறைவேற்றப்பட்டுள்ளது. திருப்பூர் தொகுதியில் தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர். இவர்கள் பொருளாதாரத்தை உயர்த்தும் பணியை செய்து வருகின்றனர். மக்களின் வாழ்வு சிறக்க கழக கூட்டணிக்கு வாக்களியுங்கள்.

மத்தியில் பா.ஜ.க அரசு தேவை. மத்தியில் வளமான, வளர்ச்சி அடைந்த நாடாக இருந்தாலும், பாதுகாப்பான நாடாக இருக்க வேண்டும் என்ற உறுதியை மோடி அரசு நமக்கு கொடுத்துள்ளது. அதற்கு உறுதுணையாக முதலமைச்சரும், துணைமுதலமைச்சரும் செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் அனைத்து தரப்பு மக்களின் எண்ணங்களை நிறைவேற்றுவார்கள். மத்திய, மாநில அரசுகளின் ஒத்தக் கருத்தின் படி தமிழக மக்களின் தேவைகள் உடனடியாக பூர்த்தி செய்யப்படும். அ.தி.மு.க. கூட்டணி மக்கள் விரும்பும் கூட்டணி. தி.மு.க. கூட்டணி மக்கள் வெறுக்கும் கூட்டணி. பெண்கள் முன்னேற்றம் அ.தி.மு.க. ஆட்சியில் உறுதி செய்யப்பட்ட ஒன்று. இதனால் பெண்களுக்கான சிறப்பு திட்டங்களை கொடுக்க மத்திய, மாநில அரசுகள் தயார்படுத்தியுள்ளது.

இவ்வாறு ஜி.கே.வாசன் பேசினார்.

இந்த பிரசாரத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.என்.விஜயகுமார்(வடக்கு), சு.குணசேகரன்(தெற்கு), த.மா.கா. மாவட்ட தலைவர் ரவிகுமார், மோகன்கார்த்திக், கழக நிர்வாகிகள் ஜெ.ஆர்.ஜான், வி.ராதாகிருஷ்ணன், கருணாகரன், விகேபி.மணி, பட்டுலிங்கம், கணேஷ், முன்னாள் கவுன்சிலர்கள் பாலசுப்பிரமணியம், செந்தில், சண்முகசுந்தரம் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்