கன்னியாகுமரி

மக்களுக்கு தங்கு தடையின்றி நலத்திட்டங்கள் சென்றடையும் – தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ந.தளவாய் சுந்தரம் பேச்சு…

கன்னியாகுமரி:-

மக்களுக்கு தங்கு தடையின்றி நலத்திட்டங்கள் சென்றடையும் என்று தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ந.தளவாய்சுந்தரம் தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டம், தேரூர் பேரூராட்சிக்குட்பட்ட பாலகிருஷ்ணன்புதூர் – உதிரப்பட்டி சாலையினை, ரூ.50 லட்சம் மதிப்பில் 1700 மீ நீளத்தில் புதிய தார்ச்சாலையாக அமைக்கும் பணியினை தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி ந.தளவாய் சுந்தரம் நேற்று துவக்கி வைத்தார்.

நிகழ்வில் அவர் பேசியதாவது:- 

இந்த சாலையானது கடந்த 18 வருடத்திற்கு முன்னர் புரட்சித்தலைவி அம்மா ஆட்சியில், நான் அமைச்சராக இருந்தபோது உருவாக்கப்பட்ட சாலையாகும். இச்சாலையானது இடைப்பட்ட காலத்தில் மிகவும் பழுதடைந்து, பாதசாரிகள் பயணிக்க மிகவும் சிரமமாக உள்ளதாகவும், அதனை சீர் செய்து தரும்படியாகவும், இக்கிராம மக்கள் என்னிடத்தில் கோரிக்கை வைத்தனர். அதனடிப்படையில், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரின் பரிந்துரையின்பேரில் இச்சாலையை சீரமைக்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு பெற்று, 1700 மீ நீளத்திற்கு புதிய தார்சாலையாக சீரமைக்கும் பணியினை துவக்கி வைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

சென்னையில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர், வறுமைக் கோட்டிற்குகீழ் வாழும் ஏழை, எளிய மக்களுக்கு ரூ.2000 நிதியுதவி வழங்கும் திட்டத்தினை துவக்கி வைத்தார். அதனை எதிர்த்து எதிர்கட்சிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அவ்வழக்கினை நீதிபதிகள் தடை செய்ய இயலாது என தள்ளுபடி செய்தனர். தற்போது, மக்களவை தேர்தல் நடைபெற இருப்பதால், இத்திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு, மீண்டும் மக்களவை தேர்தல் முடிந்தபின் இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். அம்மாவின் வழியில் செயல்படும் நமது தமிழக அரசுதான் மக்கள் நலத்திட்டங்களை எவ்வித தடங்கலுமின்றி தொடர்ந்து செயல்படுத்தும். வேறு யாராலும் அம்மாவின் திட்டங்களை நிறுத்த முடியாது என முதலமைச்சர் தெரிவித்தார்கள். இவ்வாறு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி திரு.ந.தளவாய் சுந்தரம் அவர்கள் பேசினார்கள்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆவின் பெருந்தலைவர் எஸ்.ஏ.அசோகன், ஆரல்வாய்மொழி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தலைவர் எஸ்.கிருஷ்ணகுமார், தேரூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் வீரபுத்திரன், ஜெயசீலன், விக்ரமன், பாலகிருஷ்ணன்புதூர் மற்றும் உதிரப்பட்டி ஊர்மக்கள் பலர் கலந்து கொண்டனர்.