திருவள்ளூர்

மக்களை குழப்பி போராட்டங்களை தூண்டி விடுகிறார் மு.க.ஸ்டாலின் – வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு

திருவள்ளூர்

மக்களை குழப்பி போராட்டங்களை ஸ்டாலின் தூண்டி விடுகிறார் என்று திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ. கூறினார்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும் கழக வளர்ச்சி பணிகள் குறித்தும் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் பாடிய நல்லூரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளரும், அம்பத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வி.அலெக்சாண்டர் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வழியில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் அம்மாவின் நல திட்டங்களை தொடர்ந்து மக்களுக்கு வாரி வழங்கி வருகின்றனர். ஆனால் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் மக்களை குழப்பி பல்வேறு போராட்டங்களை தூண்டி விடுகிறார். அது ஒருபோதும் எடுபடாது. விரைவில் வர இருக்கின்ற மாநகராட்சி தேர்தலில் மனமாட்சிமைகளை மறந்து நீங்கள் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து தலைமைக்கழகம் யாரை வேட்பாளராக நிறுத்துகிறதோ அவரது வெற்றிக்கு பாடுபட வேண்டும்.

இன்று பூத் கமிட்டி அமைக்க ஆளில்லாத நடிகர் எல்லாம் முதலமைச்சர் கனவில் மிதக்கிறார்கள். அந்த கனவு ஒரு நாளும் நனவாகாது. நீங்கள் செய்யும் தொண்டு மக்களுக்கு செய்யும் தொண்டு. கடந்த மூன்று ஆண்டுகளில் 36 ஆயிரம் போராட்டங்களை கடந்து வெற்றிகரமாக அம்மாவின் ஆட்சியை சீரும் சிறப்புமாக நடத்தி வரும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த புனிதமான ஆட்சி தொடர நீங்கள் அனைவருமே தொண்டு ஆற்ற வேண்டும்.வருகின்ற மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை கழகத்திற்கு பெற நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என சூளுரைப்போம்.

இவ்வாறு மாவட்ட கழக செயலாளர் வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ. பேசினார்.