தற்போதைய செய்திகள்

மக்களை குழப்பி வரும் தி.மு.க. படுதோல்வி அடைவது உறுதி – அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் திட்டவட்டம்

மதுரை

மக்களை குழப்பி வரும் தி.மு.க. படுதோல்வி அடைவது உறுதி என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திட்டவட்டமாக கூறினார்.

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் திருமங்கலத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட கழக செயலாளரும், வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று ஆலோசனை வழங்கி பேசியயதாவது:-

நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் ஒரு இமாலய கூட்டணியை முதலமைச்சரும், துணை முதலமைச்சர் உருவாக்கி யுள்ளனர். உள்ளாட்சித் தேர்தலை நடத்தக்கூடாது என்று மூன்று முறை ஸ்டாலின் வழக்கு தொடுத்தார். அதில் அனைத்திலும் குட்டு பட்டு திரும்பி உள்ளார். தற்போது தேர்தலை சந்திக்க தைரியமில்லாமல் மக்களை திசை திருப்பும் வகையில் குடியுரிமை சட்டத்தை பற்றி பல்வேறு அவதூறு பிரச்சாரத்தை செய்தார். சென்னையில் பேரணி நடத்தினார். அதில் எதிர்பார்த்த அளவு கூட்டம் இல்லாமல் தோல்வி அடைந்தார். இதனால் விரக்தி அடைந்த ஸ்டாலின் இன்னமும் மக்களை குழப்பும் வகையில் பேசி வருகிறார்.

தேர்தலை நிறுத்த உச்ச நீதிமன்றம் சென்ற ஸ்டாலின் தற்போது ஊடகங்களில் திமுகவுக்கு வாக்களியுங்கள் என்று கேட்கிறார். இதை பார்த்து மக்கள் சிரிப்பாய் சிரிக்கின்றனர். ஸ்டாலினிடம் உறுதித்தன்மை கிடையாது. ஆகவே இந்த தேர்தலில் திமுக கூட்டணி நிச்சயம் தோல்வி அடையும்.

தற்போது 27 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. ஜனவரி 2-ந்தேதி ஓட்டு எண்ணிக்கையின் போது மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகம் தான் உள்ளாட்சித் தேர்தலில் நூற்றுக்கு நூறு வெற்றி பெற்றது, திமுக கூட்டணி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் டெபாசிட் இழந்தது என்ற வரலாற்றை நீங்கள் உருவாக்கி தர வேண்டும்.மேலும் பொங்கல் பரிசை மக்களுக்கு கொடுக்க விடாமல் தடை செய்தது திமுக தான். நிச்சயம் தேர்தல் முடிந்த பின் திமுக போட்ட தடையை தகர்த்தெறிந்து அனைத்து இல்லங்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

இந்த கூட்டத்தில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத்குமார், சட்டமன்ற உறுப்பினர் நீதிபதி, கே.மாணிக்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.