தற்போதைய செய்திகள்

மக்களை போராட்டம் நடத்த தி.மு.க. தூண்டி விடுகிறது – அமைச்சர் ஓ.எஸ்.மணியன் குற்றச்சாட்டு

நாகப்பட்டினம்

மக்களை போராட்டம் நடத்த தி.மு.க. தூண்டி விடுகிறது என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்த நாள் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நகர செயலாளர் வி.ஜி.கே.செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது. நகர துணை செயலாளர் நாஞ்சில் கே.கார்த்திக் வரவேற்றார்.

மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ஆத்தூர் ஆர்.செல்வராஜ், தெற்கு ஒன்றிய செயலாளர் பி.சந்தோஷ்குமார், முன்னாள் நகர கழக செயலாளர் என்.கிருஷ்ணமூர்த்தி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன். சட்டமன்ற உறுப்பினர் வி.ராதாகிருஷ்ணன், தலைமை கழக பேச்சாளர் எம்.ஜி.ஆர்.முத்து ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இக்கூட்டத்தில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசியதாவது:-

தமிழகம் முழுவதும் ஏழை, எளிய மக்களுக்கு உதவும் வகையில் அம்மா அவர்களின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. பெண் இனத்திற்கு பாதுகாப்பு கொடுத்த நிலை, பெண்களுக்கு சட்டங்கள் இயற்றிய நிலை, பெண்களுக்கு திட்டங்கள் தீட்டி அவை இயற்றப்பட்ட நிலை, பெண்கள் ஆண்களுக்கு நிகராக வாழ வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தி பெண்கள் யாரையும் எதிர்பார்க்காமல் சொந்த கால்களில் நிற்க வேண்டும் என்பதற்காக தினம், தினம் பல்வேறு திட்டங்களையும், சட்டங்களையும் கொண்டு வந்தவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்.

ஆனால் ஸ்டாலின் கூறுகிறார். பெண்களை போற்றி கொண்டாடும் நிலை அ.தி.மு.கவிற்கு கிடையாது என்கிறார். இதை பற்றி பேசுவதற்கு தி.மு.க.விற்கு தகுதியே கிடையாது. காரணம் இந்திராகாந்தி தமிழகம் வந்தபோது கல்லால் தாக்கி ரத்தம் சொட்ட செய்தவர்கள் தி.மு.க.வினர்.

சட்டசபையிலே அனந்தநாயகி அவர்களை அசிங்கப்படுத்தி பேசியவர் கருணாநிதி, உதயசூரியன் சின்னத்துடன் லாரியை விட்டு நம் அம்மாவை மோதி காயப்படுத்தியவர்கள் தி.மு.க.வினர். எனவே பெண்களை பற்றி பேசுவதற்கு தகுதி அற்றவர்கள் தி.மு.க.வினர். உலகத்திலே வாழ்ந்து கொண்டிருக்கும் பெண் சமுதாயத்தின் அடையாளம் என்றால் அது அம்மா தான். அம்மா அவர்களின் பிறந்த நாள் என்றால் அது ஏழை எளிய மக்களுக்கு உதவும் நாளாக அமைவது அனைவருக்கும் தெரியும்

இன்று தமிழக முதல்வரை பலரும் பாராட்டுகின்றனர். இதற்கு காரணம் அம்மாவின் திட்டங்களை எடப்பாடியார் ஒன்று விடாமல் செய்து வருகிறார். வேளாண் குடிமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலத்தை நிறைவேறி வரலாற்றில் சிறப்பு பெற்றுள்ளார் எடப்பாடியார். தமிழ்நாட்டில் எந்த இடத்திலாவது மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுக்கப்பட்டதா? இல்லை. ஆனால் இதை கையில் எடுத்துக் கொண்டு தூண்டிவிட்டு போராட்டம், போராட்டம் என்று தி.மு.க. செய்ததை மறக்க முடியாது. அ.தி.மு.க. ஆட்சி இன்று போகுமா, அடுத்த வாரம் போகுமா என்று கனவு கண்டது தி.மு.க. ஆனால் அம்மா கூறிய வழியில் எப்படி சிறப்பான ஆட்சி நடைபெறுகிறது என்பதை இந்த நாடே அறியும்.

இவ்வாறு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசினார்.

பின்னர் 3000 பெண்களுக்கு புடவைகளை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட கழக பொருளாளர் வா.செல்லையன், மாவட்ட கழக துணை செயலாளர் எஸ்.செல்வி, மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, ஊராட்சி கிளை, இளைஞரணி, மாணவரணி, விவசாய அணி, மீனவரணி, மகளிரணியினர் கலந்து கொண்டனர். முடிவில் நகர கழக அவைத்தலைவர் எஸ்.அலி நன்றி கூறினார்.