தற்போதைய செய்திகள்

மக்கள் நலத்திட்டங்களை யாராலும் தடுக்க முடியாது – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆவேச பேச்சு

கோவை

கழக அரசை குறை கூறுவதே தி.மு.க.வுக்கு வாடிக்கையாகி விட்டது. மக்கள் நலத்திட்டங்களை யாராலும் தடுக்க முடியாது என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

கோயம்புத்தூர் மாவட்டம், காரமடை, தெலுங்குபாளையம் ஆகிய இடங்களில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் மாவட்ட கழக செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்றது.

இம்முகாமில் அமைச்சர் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டு 1828 பயனாளிகளுக்கு ரூ.8.47 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி, காரமடை ஊராட்சி ஒன்றியம், தேக்கம்பட்டி ஊராட்சிக்காக பூதப்பள்ளத்தில் நீர் எடுக்கும் தொட்டி மற்றும் குழாய் விஸ்தரிப்பு திட்டத்தின் கீழ் ரூ.69.89 லட்சம் மதிப்பில் குடிநீர் திட்டப்பணியினை தொடங்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் நாங்கள் மக்களுக்கு சேவை செய்வதே முதல் கடமையாக எண்ணி சிறப்போடு செயலாற்றி வருகிறோம். உங்களது குறைகளை தீர்த்து வைப்பதே எங்களது முதல் பணி. கோவை மாவட்டம் முழுவதும் எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். 50 ஆண்டு காலம் காணாத அற்புத வளர்ச்சியை தந்துள்ளோம். மேலும் மாவட்டத்தில் அனைத்து சாலைகளும் அகலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் அவினாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் சின்னியம்பாளையம் (விமான நிலையம்) வரை பாலம் அமைக்கும் பணிகள் விரைவில் துவங்கப்படவுள்ளது. காந்திபுரம் முதலடுக்கு உயர்மட்ட மேம்பாலத்தை தொடர்ந்து இரண்டாம் கட்ட மேம்பால பணிகள் மற்றும் பொள்ளாச்சி முதல் ஈச்சனாரி வரை சாலை அமைக்கும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. ஆத்துப்பாலம் – உக்கடம் வரை மேம்பாலம் பணிகள், கவுண்டம்பாளையம், ராமநாதபுரம் பகுதிகளில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றது. தொண்டாமுத்தூர் தொகுதியில் விரைவில் சிட்கோ அமையவுள்ளது. இதனால் எண்ணற்றோர் வேலைவாய்ப்பை பெறுவார்கள்.

கோவை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஏழை, எளிய மாணவ, மாணவிகளின் ஐ.ஏ.எஸ். படிக்க வேண்டும் என்னும் கனவை நினைவாக்கும் வகையில் கோவை ஆர்.எஸ்.புரத்தில் அம்மா ஐ.ஏ.எஸ். அகாடமி துவங்கப்பட்டுள்ளது. இங்கு பயின்ற 36 பேர் அரசு பணிக்கு தேர்வு பெற்றுள்ளனர்.

ஏழை எளிய மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் பொள்ளாச்சியில் அரசு கலை கல்லூரிக்கு புதிய கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டதை தொடர்ந்து, கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அரசு கலைக்கல்லூரிக்கு இன்னும் ஒரு வாரத்தில் புதிய கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்படவுள்ளது. மக்கள் எங்களை புரிந்து கொண்டு விட்டனர். பொய்யான வாக்குறுதிகளை தந்து நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தி.முக.விற்கு விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைதேர்தலில் மக்கள் பாடம்பு புகட்டி விட்டனர்.

எங்களுக்கு மாபெரும் வெற்றியை தந்துள்ளனர். தேர்தலுக்கு மட்டுமே உங்களை சந்திக்க வரும் திமுகவுக்கு கழக அரசு கொண்டு வரும் மக்கள் நலத்திட்டங்களை குறைகூறுவதற்கு தகுதி கிடையாது. மக்கள் நலத்திட்டங்களை யாரும் தடுக்க முடியாது. முட்டுக்கட்டை போட முடியாது.

இங்கு பெறப்பட்ட பொதுமக்களின் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும். மேலும், அரசால் செயல்படுத்தப்படும் மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தையும், அனைவரும் பெற்று பயனடைய வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.