திருவள்ளூர்

மக்கள் நலத் திட்டங்கள் தொடர இரட்டை இலைக்கு வாக்களிப்பீர் – பூந்தமல்லியில் ஜெகன்மூர்த்தி பிரச்சாரம்…

திருவள்ளூர்

மக்கள் நலத்திட்டங்கள் தொடர்ந்து கிடைக்க இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிப்பீர் என்று பூந்தமல்லியில் புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி பிரச்சாரம் செய்தார்.

திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் டாக்டர் வேணுகோபால், பூந்தமல்லி சட்டமன்ற கழக வேட்பாளர் க. வைத்தியநாதனை ஆதரித்து கூட்டணி கட்சித் தலைவர் புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி காட்டுப்பாக்கத்தில் வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார். ஊரகத் தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின், திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி.பலராமன், முன்னாள் அமைச்சர்கள் மாதவரம் மூர்த்தி, பி.வி.ரமணா, மணிமாறன், ஒன்றிய செயலாளர் திருநாவுக்கரசு, காட்டுப்பாக்கம் கே.ஜி.டி.கவுதமன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உடன் சென்றனர்.

பிரச்சாரத்தின் போது புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஏழை, எளிய மக்களுக்கு மிக அற்புதமான திட்டங்களை தீட்டி கொண்டு வந்தார். அந்த திட்டங்கள் சாமானிய மக்களுக்கும் சென்றடையும் வகையில் எடப்பாடி கே.பழனிசாமி மிகச்சிறப்பாக நிறைவேற்றி வருகின்றார். இதுவரைக்கும் அம்மா கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் நிறைவேற்றி வைத்துள்ளார். இன்னும் நிறைய திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றுவார்கள். அப்படி அவர்கள் நிறைவேற்ற வேண்டுமென்றால் டாக்டர் வேணுகோபால், வைத்தியநாதன் ஆகியோரை பெருவாரியாக வாக்குகள் வித்தியாசத்தில் பெற்று வெற்றி பெற செய்ய வேண்டும்.

காட்டுப்பாக்கத்தில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் ஏறக்குறைய தீர்த்து வைத்துள்ளனர். புறம்போக்கு நிலங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் இலவச வீட்டு மனை பட்டா விரைவில் வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் 25 ஆயிரம் மரங்கள் நடப்படும். சுற்றுச்சூழல் காக்கப்படும். எல்லாபுரம், திருவள்ளூர், பூந்தமல்லி ஒன்றியங்களில் விவசாயம் செய்பவர்களுக்கு விவசாய கருவிகள் உரங்கள் மானிய விலையில் வழங்கப்படும். பூந்தமல்லி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் ஒருங்கிணைந்த பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும். அரசு தேர்வுகளுக்கு பயிற்சி மையம் அமைக்கப்படும். ஊராட்சி பகுதிகளில் இளைஞர்களுக்கு அம்மா உடற்பயிற்சி கூடம் நிறுவப்படும். மக்கள் பயன்பாட்டிற்கு அனைத்து ஊராட்சிகளிலும் பொது சுகாதார வளாகங்கள் ஏற்படுத்தி தரப்படும்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் தொகுதிக்குள் மினி ஸ்டேடியம் அமைக்கப்படும். பூந்தமல்லி தொகுதிக்குள் அரசு அறிவியல் கலைக்கல்லூரி அமைக்கப்படும். ஏற்கனவே அம்மா அவர்கள் கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் முதலமைச்சரும், துணை முலமைச்சரும் நிறைவேற்றியுள்ளனர். இனியும் கொண்டு வரும் திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றி அனைத்து ஏழை எளிய மக்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். ஆகவே இரண்டு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி பேசினார்.