தற்போதைய செய்திகள்

மக்கள் நல திட்டங்களை தடுக்கும் தி.மு.க.வுக்கு பாடம் கற்பிப்போம் – அமைச்சர் டி.ஜெயக்குமார் சூளுரை…

சென்னை:-

மக்களின் திட்டங்களை தடுக்கும் தி.மு.க.வுக்கு மக்கள் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் பேசினார்.

வடசென்னை நாடாளுமன்றம் தொகுதி திரு.வி.க நகர் தொகுதியில் கழக கூட்டணியின் தே.மு.தி.க வேட்பாளர் ஆர்.மோகன்ராஜை அறிமுகப்படுத்தும் கூட்டணி கட்சி செயல்வீரர்கள் கூட்டம் ஓட்டேரியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வட சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் நா.பாலகங்கா தலைமை தாங்கினார். திரு.வி.க நகர் பகுதி கழக செயலாளர் இரா.வீரமணி முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், தெற்கு மாவட்டக் கழக செயலாளர் பாலகங்கா ஆகியோர் ஆலோசனை வழங்கி பேசினர்.

இக்கூட்டத்தில் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேசியதாவது:-

காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க இருந்த போது தமிழ்நாட்டில் மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. மாறாக இலங்கையில் உள்ள தமிழர்களை கொத்து கொத்தாக கொலை செய்ய காரணமாக இருந்தார்களே தவிர, அப்போது தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு குரல் கொடுக்கவில்லை. பதவி என்று இருந்தார்களே தவிர தமிழர்களின் உயிர் மீது அவர்களுக்கு அக்கறை இல்லாமல் இருந்ததை இப்போதும் தமிழர்கள் மறக்க மாட்டார்கள். ஒன்றரை லட்சம் தமிழ் மக்களை அடியோடு அழிப்பதற்கு காரணமாக இருந்த காங்கிரஸ் கட்சியோடு தி.மு.க. கூட்டணி வைத்திருந்தது. தமிழர்களை கொல்வதற்கு உதவியாக இருந்த காங்கிரசுக்கும், தி.மு.க.வுக்கும் ராஜபக்சே நன்றி கூறினார். காங்கிரஸ் அரசும், தி.மு.க.வும் உதவி செய்யாவிட்டால் இதை செய்திருக்க முடியாது என கூறினார்.

இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் தி.மு.க.வினர் மக்களுக்கு நாங்கள் செய்யும் திட்டங்களை வழக்கு போட்டு தடுத்து வருகிறார்கள். மக்களுக்கு வழங்கிய ரூ. 1000 க்கும் வழக்கு போட்டு தடுத்தார்கள். நாங்கள் வழக்கை எதிர்கொண்டு மக்களுக்கு 1000 ரூபாய் கொடுத்தோம். இப்பொழுது 2000 ரூபாய் தர போகிறோம். அதையும் பொதுமக்களுக்கு செல்லவிடாமல் தடுக்கிறார்கள். உங்களுக்கு உதவி செய்பவர்கள் நாங்கள். தடுப்பவர்கள் தி.மு.க.வினர். கழக கூட்டணி வேட்பாளர் சாம்பால் நல்ல மனிதர். அவரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வது நம் கடமை. தேர்தல் பணியில் தொய்வின்றி செயலாற்றி வெற்றிவாகை சூடி வெற்றிக்கனியை சமர்ப்பிப்போம்.

இவ்வாறு அமைச்சர் டி.ஜெயக்குமார் பேசினார்.

இக்கூட்டத்தில் தெற்கு மாவட்ட கழக செயலாளர் நா.பாலகங்கா பேசியதாவது;-

மக்கள் விரும்புகின்ற வேட்பாளர்களை தேர்தல் களத்தில் இறக்கி உள்ளோம். கழக அரசு மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். கழகத்தின் தேர்தல் அறிக்கையை படித்து மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். இதையெல்லாம் கூறி செயலாற்றி பணிபுரிந்தாலே கழகத்திற்கு வெற்றி உண்டு என்பதை மக்கள் அறிவார்கள். அம்மாவின் நலத்திட்டங்களை, முதலமைச்சர். துணைமுதலமைச்சர் ஆகியோர் அம்மாவின் வடிவில் செவ்வனே நிறைவேற்றி வருகிறார்கள்.

வேட்பாளர் சாம்பால் வெற்றி பெற்று விடுவார் என்ற நம்பிக்கை உள்ளது. நாம் கடுமையாக உழைத்து அமோக வாக்குகள் வித்தியாசத்தில் கழக கூட்டணி வேட்பாளரை வெற்றிபெற செய்ய வேண்டும். சாம்பாலை டெல்லிக்கு எம்.பி.யாக அனுப்புவோம். கழக கூட்டணி வெல்வது உறுதி. இந்த தேர்தலில் திமுக டெபாசிட் கூட பெறாது. பலம்மிகுந்த கூட்டணியாக நாம் உள்ளோம். அம்மாவின் திட்டங்களை கூறி வீடுவீடாக சென்று கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்.

இவ்வாறு மாவட்ட கழக செயலாளர் நா.பாலகங்கா பேசினார்.

இக்கூட்டத்தில் கழக நிர்வாகிகள் கே. ராஜ்முகமது, டாக்டர் கோவிந்தராஜ், எ.இளையகிருஷ்ணன், டாக்டர் கோவிந்தராஜ், ஆ. இளையகிருஷ்ணன், கே.ராஜ்முகமது, கமலநாபன், வசந்திதாசன், ராகேஷ் ராஜா, புண்ணியக்கோட்டி, வட்ட செயலாளர்கள் அப்துல்வகாப், நவமணி, எம்பி.பரமகுரு, சு.அறிவழகன், கே.சிவகுமார், கே. சுப்புரு, ஜெகன், பி.ஜீவா, பி.எம் ரமேஷ்குமார், எ.கே கருணா, ஜி.கே.கோபிநாத், கு.கோவிந்தராஜ், ராமச்சந்திரன, கூட்டணி கட்சி நிர்வாகிகள் பா.மதிவாணன், பி.கே.சேகர், பி.ஜூ.சாக்கோ, அ.கோதண்டன், எம்.கிருஷ்ணகுமார். எம்.பி.சேகர், என்.சீனிவாசன், வேலாயுதம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.