தற்போதைய செய்திகள்

மக்கள் வளர்ச்சித் திட்டங்களை தி.மு.க, காங்கிரஸ் தடுக்கிறது – ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு

திண்டுக்கல்:-

மக்களின் நம்பகத்தன்மையை தி.மு.க. காங்கிரஸ் இழந்து விட்டது என்று த.மா.கா.தலைவர் ஜி.கே.வாசன் வத்தலகுண்டு பகுதியில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசினார்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பகுதியில் கழக கூட்டணியின் பா.ம.க. வேட்பாளர் ஜோதிமுத்து, நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளர் தேன்மொழி சேகர் ஆகியோரை ஆதரித்து நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்திற்கு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தலைமை வகித்தார். கழக அமைப்புச் செயலாளர் இரா.விசுவநாதன், மாவட்ட செயலாளர் மருதராஜ், மாவட்ட பொருளாளர் உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் த.மா.க தலைவர் ஜி.கே.வாசன் பேசியதாவது:-

அ.இ.அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி 40 நாடாளுமன்ற தொகுதியிலும், 18 சட்டமன்ற தொகுதிகளிலும் 100 வெற்றி பெறும் என்பது உறுதி. திமுக, காங்கிரஸ் சந்தர்ப்பவாத கூட்டணி. சிறுபான்மையின மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கக்கூடிய கூட்டணி அ.தி.மு.க கூட்டணி. சிறுபான்மையின மக்கள் வாழ்வாதாரம் உயர வேண்டும் என்பதற்காக இக்கூட்டணி பாடுபடும். திமுக, காங்கிரஸ் கூட்டணி சிறுபான்மை இன மக்களை ஏமாற்றுவதற்காக மதச்சார்பின்மை எனக்கூறி வருகிறார்கள். அதைக்கூற அவர்களுக்கு தகுதி இல்லை. ஏனெனில் காங்கிரஸ் போட்டியிடுகின்ற தொகுதிகளில் சிறுபான்மையின வேட்பாளர் ஒருத்தர் கூட நிறுத்தவில்லை என்பது தான் உண்மை. இனியும் சிறுபான்மை இன மக்களை திமுக-காங்கிரஸ் ஏமாற்ற முடியாது. அவ்வாறு ஏமாற்ற நினைத்தால் அவர்கள் தான் ஏமாளியாக விடுவார்கள்.

மத்தியில் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சியாக செயல்படாமல் எதிரிக்கட்சியாக செயல்படுகிறது. தமிழகத்தில் எதிர்க்கட்சியாக உள்ள தி.மு.க.வும் எதிரிக்கட்சியாக செயல்படுகிறது. இதற்கு காரணம் காழ்ப்புணர்ச்சி அரசியல். இதனால் மக்களிடம் நம்பகத்தன்மையை இழந்து விட்டார்கள்.

மத்திய மாநில அரசுகள் வழங்க கூடிய திட்டங்களை கூட எதிர்க்கின்றனர். மக்களின் வளர்ச்சி திட்டங்களை தடுக்கின்ற கட்சியாக காங்கிரஸ் தி.மு.க செயல்படுகிறது. தமிழகத்தில் அம்மாவின் ஆசியோடு செயல்படுகின்ற அ.தி.மு.க ஆட்சி தொடர்ந்து செயல்பட வேண்டும். மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சி தொடர்ந்து நடைபெற வேண்டும். எனவே கழக கூட்டணி வேட்பாளர்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும்

இவ்வாறு ஜி.கே.வாசன் பேசினார்.

கூட்டத்தில் நகர செயலாளர் பீர்முகமது, ஒன்றிய செயலாளர் பாண்டியன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் நாகூர்கனி மற்றும் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.