தற்போதைய செய்திகள்

மக்கும் குப்பைகளின் மறு சுழற்சி பணிகளை துரிதப்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு…

சென்னை:-

மக்கும் குப்பைகளின் மறு சுழற்சி பணிகளை துரிதப்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் திட்டங்கள் குறித்த அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் ஆணையர் கோ.பிரகாஷ், தலைமையில் நேற்று ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சென்னை மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பணிகள், சிறப்பு திட்டங்கள் துறையின் மழைநீர் வடிகால்வாய் பணிகள், சுகாதார துறையில் மேற்கொள்ளப்பட்டு சுகாதாரம் மற்றும் தூய்மை பணிகள், திடக்கழிவு மேலாண்மை துறையின் மூலம் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம்பிரித்து மறு சுழற்சி செய்யும் முறைகள் குறித்தும் ஆணையர் அவர்கள் விரிவாக ஆலோசனை நடத்தினார்.

இக்கூட்டத்தில் ஆணையர் கோ.பிரகாஷ் பேசியதாவது:-

சென்னை மாநகராட்சியில் நாள்தோறும் 5400 மெட்ரிக்டன் திடக்கழிவுகள் அகற்றப்படுகிறது. முதல் நிலை திடக்கழிவுகள் மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்களால் வீடுவீடாக சென்று சேகரிக்கப்படுகிறது. இவ்வாறு சேகரிக்கும் குப்பைகள் பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் குப்பை கொட்டும் நிலப்பரப்பிற்கு அனுப்பப்படுகிறது. வீட்டுக்கு வீடு சென்று தரம்பிரிக்கப்பட்ட திடக்கழிவுகளை சேகரிக்கும் முறையை தீவிரமாக பின்பற்ற வேண்டும்.

அனைத்து அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், பன்னடுக்கு கட்டங்கள், உணவகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் சேகரமாகும் கழிவுகளை தங்களின் வளாகத்திற்குள்ளேயே பதனிடுதல் / மறுசுழற்சி செய்யப்பட்டு வருவதை தொடர்ந்து கண்காணிக்கவும் விடுப்பட்டவர்களுக்கு தகுந்த அறிவுரைகளை வழங்கி வீட்டிலேயே மக்கும் குப்பையை உரமாக மாற்றும் வசதியினை ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகங்களில் கொட்டப்படும் குப்பைகளின் அளவினை குறைக்க தற்போது இயங்கி வரும் குப்பையினை மக்க செய்யும் தொழிலகங்கள் திறம்பாட்டுடன் இயக்குதல் மற்றும் அவற்றின் எண்ணிக்கையினை மேலும் அதிகரிக்க வேண்டும். உகந்த இடங்களில் ஈரக்கழிவுகளான உணவு, காய்கறி, பழம், மாமிசம், தோட்டக்கழிவுகள் மற்றும் உலர்கழிவுகளான மரம், காகிதம், பிளாஸ்டிக், இரும்பு கழிவுகளை விஞ்ஞான ரீதியில் திறம்பாட்டுடன் மறுசுழற்சி செய்து கழிவுகளை முறையாக மாற்று உபயோகத்திற்கு பயன்படுத்த வேண்டும்.

தற்போது சென்னை மாநகராட்சியில் 1369 இடங்களில் நாளொன்றுக்கு சுமார் 385 மெட்ரிக்டன் மக்கும் குப்பைகள் உரமாக மாற்றப்பட்டு மறுசுழற்சி செய்யப்படுகிறது. மக்கும் குப்பைகளை மறுசுழற்சி செய்து பயன்படுத்த மாநகராட்சி மண்டல அலுவலங்கள், கோட்ட அலுவலங்கள், திறந்தவெளி காலியிடங்கள், குப்பை மாற்று வளாகங்கள், அம்மா உணவகங்கள் மற்றும் பயன்பாடற்ற நிலையில் உள்ள மத்திய தார்கலவை நிலையம் போன்ற இடங்களில் ஆங்காங்கே விஞ்ஞானரீதியிலும் சுகாதார முறைகளை பின்பற்றியும் கிணற்று உறைகள் அமைத்து நாளொன்றுக்கு சுமார் 2000 மெட்ரிக்டன் மக்கும் குப்பைகளை மறுசுழற்சி செய்து பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகங்களில் கொட்டப்படும் குப்பைகளின் அளவினை குறைக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இவ்வாறு குப்பைகளை மறுசுழற்சி செய்வதன் மூலம் தொழிலாளர்களின் மனித வேலைப்பாடு, காலவிரயம் மற்றும் குப்பைகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்ற தேவையான செலவினங்கள் வெகுவாக குறைக்கப்படும். உற்பத்தி செய்யப்படும் உரங்களை வணிகப்படுத்துவதன் மூலம் பணியாளர்களுக்கு வருமானத்தை ஏற்படுத்த இயலு.

இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் இணை ஆணையர் ஆர்.லலிதா, துணை ஆணையர்கள் எம்.கோவிந்தராவ், பி.மதுசுதன் ரெட்டி, பி.குமாரவேல் பாண்டியன், வட்டார துணை ஆணையாளர்கள் எஸ்.திவ்யதர்ஷினி, டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஷ், பி.என்.ஸ்ரீதர், தலைமை பொறியாளர்கள், கண்காணிப்பு பொறியாளர்கள், மண்டல அலுவலர்கள், செயற் பொறியாளர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.