தற்போதைய செய்திகள்

மசூதி- கிறிஸ்தவ தேவாலயங்களை சீரமைக்க அம்மா அரசு நிதி உதவி- அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்…

மதுரை:-

மசூதி, கிறிஸ்தவ தேவாலயங்களை சீரமைக்க அம்மா அரசு நிதி உதவி வழங்கி வருவதாக மதுரை கோரிப்பாளையத்தில் மாபெரும் அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசிய அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை மாநகர் மாவட்டம் 39-வது வட்ட கழகத்தின் சார்பில் கோரிப்பாளையம் தர்கா அருகே மாபெரும் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு 39-வது வட்ட கழக செயலாளர் ஏ.காஜா தலைமை தாங்கினார். பகுதி கழக செயலாளர் கே.ஜெயவேல் முன்னிலை வகித்தார். கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன்செல்லப்பா ஆகியோர் பங்கேற்று அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக நிர்வாகிகள் புதூர் துரைப்பாண்டி, சி.தங்கம், ஜெ.ராஜா, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், முன்னாள் துணை மேயர் கு.திரவியம், புதூர் அபுதாகீர் உள்பட பலர் கலந்து கொண்டனர்

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 71-வது பிறந்தநாள் விழா மக்களுக்கு நலத்திட்டம் வழங்கும் விழாவாக தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அம்மாவின் வழியில் ஒரு சிறந்த ஆட்சியை முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் சிறப்பாக நடத்தி வருகின்றனர்.

பொதுவாக சிறுபான்மை இன மக்களுக்கு எண்ணற்ற சாதனை திட்டங்களை அம்மாவின் வழியில் முதலமைச்சர் வழங்கி வருகிறார். 1300 சிறுபான்மையின மாணவ, மாணவிகள் நலனுக்காக 16 சிறுபான்மையினர் நல விடுதிகளை அம்மாவின் அரசு பராமரித்து வருகிறது. அது மட்டுமல்லாது மசூதிகள், கிறிஸ்தவ தேவாலயங்களை சீரமைக்க ஆண்டு முழுவதும் அம்மாவின் அரசு நிதி ஒதுக்கி வருகிறது.

தற்போது 2019-2020-ம் நிதி ஆண்டில் சிறுபான்மையினர் நலனுக்காக ரூ.15 கோடியை அம்மாவின் அரசு ஒதுக்கியுள்ளது. கடந்த தி.மு.க. ஆட்சியில் கபளீ கரம் செய்யப்பட்ட வக்பு வாரிய சொத்துகளை அம்மா அவர்கள் மீட்டு கொடுத்துள்ளார். தொடர்ந்து உங்களுக்கு எண்ணற்ற திட்டங்களை வழங்கி உங்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கும் இந்த அரசிற்கு உங்கள் நல் ஆதரவை எப்போதும் தந்திட வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசினார்.