தற்போதைய செய்திகள்

மட்டமாக பேசி வரும் ஸ்டாலினுக்கு தைலாபுரத்தில் பயிற்சி அளிக்க தயார் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு…

கிருஷ்ணகிரி:-

மட்டமாக பேசி வரும் தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு தைலாபுரம் தோட்டத்தில் பயிற்சி அளிக்கத்தயார் என்று பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் கேபி.முனுசாமி, ஓசூர் சட்டமன்ற கழக வேட்பாளர் ஜோதி பாலகிருஷ்ணா ரெட்டி ஆகியோரை ஆதரித்து ஓசூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-

நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கேபி.முனுசாமி 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது. ஓசூர் சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளரின் வெற்றியும் பிரகாசமாக உள்ளது.அ.தி.மு.க வேட்பாளரை வெற்றிபெற செய்து, நம் பெயரை காப்பாற்ற வேண்டும். தற்போதைய கருத்துக்கணிப்பின் படி 300 இடங்களில் பா.ஜ.க கூட்டணி வெற்றிபெறும் என தெரியவந்துள்ளதால் மீண்டும் மோடி தான் பிரதமர்.

8 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றிபெற்றாலே அ.தி.மு.க ஆட்சி தொடரும் என்ற நிலையிலும். 18 சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க வெற்றிபெறும். இந்த தேர்தலுடன் தி.மு.க முடிவுக்கு வரும். ஸ்டாலின் எதை பேச வேண்டுமென தெரியாமல் மட்டமாக பேசி வருகிறார். பா.ம.க தைலாபுரம் தோட்டத்தில் நடத்தி வரும் அரசியல் பயிலரங்கில் ஸ்டாலின் கலந்து கொண்டு பயிற்சி பெற்றுக்கொள்ளலாம்.

1998-ஆம் ஆண்டு அ.தி.மு.க, பா.ம.க கூட்டணியில் கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட்ட கேபி.முனுசாமி வெற்றிபெற்றார். தற்போதும் அப்படிப்பட்ட கூட்டணி அமைந்திருப்பதால் மீண்டும் முனுசாமி வெற்றி பெறுவார். இது மெகா கூட்டணி. கடுமையாக உழைத்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க வேண்டும்.

இவ்வாறு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேசினார்.

இந்த பிரச்சார கூட்டத்தில் பா.ம.க தலைவர் ஜி.கே.மணி, மாநில பொதுச்செயலாளர் குமார், நிர்வாகிகள் அருண்ராஜ ஆறுமுகம், வெங்கடேஷ், பா.ஜ.க மாவட்ட தலைவர் முனிராஜ் பாலகிருஷ்ணன், தே.மு.தி.க மாவட்ட மாவட்ட செயலாளர் முருகேசன், கழக நிர்வாகிகள் ஓசூர் நகர செயலாளர் நாராயணன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் சீனிவாசன், நகர்மன்ற முன்னாள் உறுப்பினர்கள் ஸ்ரீதர், ரமேஷ் நாராயணரெட்டி, வாசுதேவன், நந்தகுமார், குபேர என்கிற சங்கர் ஜே.பி என்கிற ஜெய்பிரகாஷ், விஜய் , ஓசூர் நகரமன்ற முன்னாள் தலைவர் நஞ்சுண்டசாமி இம்ரான் பாஷா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.