தற்போதைய செய்திகள்

மதக்கலவரத்தை தூண்டிவிட்டு அரசியல் குளிர் காயும் தி.மு.க.விற்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் – அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வேண்டுகோள்

திருநெல்வேலி:-

மதக்கலவரத்தை தூண்டிவிட்டு அரசியல் குளிர்காயும் திமுகவிற்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் ரெட்டியார்பட்டி வெ.நாராயணனை ஆதரித்து பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி நேற்று களக்காடு ஒன்றியத்தில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கொட்டும் மழையில் அவர் வாக்காளர்களை நேரில் சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

இதன்பின்னர் களக்காடு ஒன்றியம் கருவேலங்குளம் கிராமத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் தங்கி இருக்கும் கருவேலங்குளம் வீட்டிற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு இரண்டு பேர் லுங்கி கட்டி வந்திருந்தனர். அப்போது நான் வெளியே கிளம்பிக் கொண்டிருந்தேன். அவர்களிடம் என்னவென்று கேட்டேன். ரேஷன் கடை வேண்டும் என்று கூறினர். எத்தனை வீடு இருக்கு என்று கேட்டேன். 60 வீடுகள் உள்ளதாக கூறினார்கள். தாசில்தாரிடம் மனு கொடுங்கள். அதன் நகலை என்னிடம் நாளை காலை கொண்டு வாருங்கள் என்று கூறி அவர்களை அனுப்பிவிட்டேன். அவர்கள் குடிபோதையில் இருந்ததால் அவர்களிடம் அதிகம் நான் பேசவில்லை. அவர்களும் எனது வீட்டில் சாப்பிட்டு விட்டு தான் கிளம்பி சென்றனர்.

என் வீட்டுக்கு வந்தவர்கள் ஜமாத்தில் இருந்து வந்தவர்கள் மாதிரி தெரியவில்லை, அவர்கள் திமுக கூட்டணியில் உள்ளவர்கள் என்பது இப்போதுதான் எனக்கு தெரிய வந்தது. அவர்கள் என்னிடம் வந்து வழியச் சண்டை இழுத்து பிரச்சினையை உருவாக்கி அதை பெரிய நியூஸ் ஆக ஆக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் திட்டமிட்டு வந்துள்ளனர்.

இந்த சம்பவத்தின் உண்மைத் தன்மை தெரியாமல் திமுகவில் உள்ள முஸ்லிம் அமைப்புகள் எனக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகின்றனர். முன்னணி தலைவர் உண்மைத் தன்மை தெரியாமல் விசாரிக்காமல் அறிக்கை கொடுத்துள்ளனர். என்னிடம் சம்பந்தப்பட்ட தலைவர்கள் கேட்டு இருக்கலாம். இஸ்லாமிய மக்களும், கிறிஸ்தவ மக்களும் அண்ணா திமுகவிற்கு ஓட்டுபோட தயாராக உள்ளனர். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கழகத்திற்கு வாக்களிக்காத முஸ்லிம்கள் வேலூர் இடைத்தேர்தலில் கழகத்திற்கு வாக்களித்தனர்.

மோடியை பற்றி நான் உயர்த்தி பேசி வருவதால் திட்டமிட்டே இப்படி ஒரு அவதூறான பிரச்சினையை கிளப்பி விட்டுள்ளனர். இந்த பிரச்சினையில் திமுக பின்புலமாக இருந்து செயல்பட்டு வருகிறது. திமுக கூட்டணியில் உள்ள முஸ்லிம் கட்சிகள் இஸ்லாமிய சமுதாய வாக்குகளை கழகத்திற்கு விழுந்து விடாமல் திமுகவிற்கு வாங்கும் நோக்கில் இழிவான செயலில் ஈடுபட்டுள்ளனர். இது ஒரு திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகமாகும். இந்த பிரச்சினையை பெரிதாக்க நினைத்து திமுக கூட்டணி கட்சிகள் ஏர்வாடியிலும், மதுரையிலும் என் படத்திற்கு அவமரியாதை செய்துள்ளனர்.

நடந்தது உண்மையா என்பதை தெரிந்து இதுபோன்ற செயல்களில் திமுகவில் உள்ள முஸ்லிம் தலைவர்கள் செயல்பட வேண்டும். நான் எப்போதுமே வெளிப்படைத்தன்மையாகவே பேசக்கூடியவன். இஸ்லாமிய சமுதாய மக்கள் மீதும் இஸ்லாமியர்கள் மீதும் நான் எந்த ஒரு தவறான கருத்துக்களையும் கூறவில்லை. அவர்கள் கிளப்பிவிட்டது அத்தனையும் பொய். இஸ்லாமியர்களுக்கு எதிராக நான் பேசியதாக திமுக ஒரு தவறான பிரச்சாரத்தை செய்து வருகிறது. கழகத்திற்கு வாக்களிக்கும் இஸ்லாமிய சமுதாய மக்களை திசைதிருப்பும் நோக்கில் திமுக கூட்டணி உள்ள இஸ்லாமிய கட்சிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

திமுக செய்வது அற்பத்தனமான, கோழைத்தனமான, கேவலமான அரசியல் ஆகும். ஒவ்வொரு முறையும் மதத்தை தூண்டிவிட்டு அரசியல் செய்யும் திமுகவிற்கு வாக்காளர்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும். இஸ்லாமிய சமுதாய மக்களிடம் கேட்டுக் கொள்வது இது போன்ற முறைகேடான வாதங்களை வைத்து மதத்தை தூண்டி விடுகின்ற மதத்தை வைத்து அரசியல் செய்கின்ற திமுக போன்ற கட்சிகளை நீங்கள் புறக்கணிக்க வேண்டும். எல்லா மதமும் சம்மதம் என்று எண்ணக் கூடியவர்கள் நாங்கள்.

தர்காவில் சென்று வழிபாடு செய்து இருக்கிறோம். பள்ளிவாசலுக்கு சென்று தொழுகை நடத்தி உள்ளோம். கிறிஸ்தவர் ஆலயங்களுக்கு சென்று வழிபாடு நடத்தி உள்ளோம். எனவே எங்களுக்கு எல்லா மதமும் ஒரே மதம் தான். என்னை பற்றி எனது மாவட்டத்தில் உள்ள இஸ்லாமிய பெருமக்களுக்கு நன்றாகத் தெரியும். இஸ்லாமிய சமுதாய மக்களை நான் அப்பு என்று தான் அழைப்பேன். அப்பா மகன் உறவு எங்களிடம் உண்டு. இதே நிலை நீடித்தால் அடுத்து வரும் தேர்தல்களில் மதம்தான் முக்கிய பிரச்சினையாக இருக்கும். இது நாட்டின் வளர்ச்சிக்கு நல்லதாக தெரியவில்லை.

சிவகாசியில் இஸ்லாமிய சமுதாய மக்கள் எனக்காக வாக்கு சேகரித்தனர். இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த ஒரு ஊனமுற்றோருக்கு நான் வண்டி வாங்கி கொடுத்துள்ளேன். நான் சிவகாசி வரும் போதெல்லாம் அவர் வந்து விடுவார். அவர் கூறி ஏராளமான இஸ்லாமிய உடல் ஊனமுற்றவர்களுக்கு வண்டிகள் வாங்கி கொடுத்துள்ளேன்.

இஸ்லாமிய சமுதாய மக்களும் நானும் எவ்வாறு உறவோடு இருக்கிறோம் என்பது எனது மாவட்டத்தில் சென்று முஸ்லிம் கட்சிகள் விசாரித்துக் கொள்ள வேண்டும். நான் அமெரிக்கா சென்ற போது கூட இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த ஒருவர்தான் என்னை அழைத்துச் சென்று அன்போடு உபசரித்தார். திமுகவில் உள்ள முஸ்லிம் சமுதாய கட்சிகள் என்னிடம் நல்ல நண்பர்களாகத்தான் இருந்தார்கள். திமுக கூட்டணி சென்ற பிறகு அவர்களது குணம் மாறி விட்டது. நானும் ஒரு சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவர் தான். என்னுடைய வளர்ச்சி பிடிக்காமல் இது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோன்று தேவர் சமுதாயம், ஆதிதிராவிட சமுதாயத்தைச் சேர்ந்த அமைச்சரை செய்திருந்தால் அவர்கள் சார்ந்த சமுதாய மக்கள் இவர்களை சும்மா விடுவார்களா. நான் ஒரு சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவன் என்பதால் இவர்கள் இந்த அளவிற்கு எனக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். ஒரு சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவர் மேலே வந்து விடக்கூடாது என்பதற்காக இப்படி செய்கின்றனர். தேர்தலில் கழகத்திற்கு ஆதரவாக பிரேமலதா, சரத்குமார், ஜி.கே.மணி, நடிகர் கார்த்திக் உட்பட கூட்டணி கட்சி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்து இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தனர்.

பொதுத் தேர்தல் ஆக இருந்தால் மட்டுமே முன்னணி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்திற்கு வருவார்கள் ஸ்டாலின் பேசுவது அனைத்தும் பொய்கள் தான். என்ன பேசுகிறோம் என்று கூட ஸ்டாலின் உணர்ந்து பேசவில்லை. பாண்டிச்சேரி சென்று தமிழ்நாடு முதலமைச்சர் நாராயணசாமி என்று திட்டுகிறார். நாங்குநேரியில் திமுகவினர் பணம் பட்டுவாடா செய்த இரண்டு லட்சத்தை பறிமுதல் செய்து திமுக எம்.எல்.ஏ மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாங்குநேரி இடைத்தேர்தலில் கழக வேட்பாளர் மாபெரும் வெற்றி பெறுவார்.

இவ்வாறு அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறினார்.