மதுரை

மதுரையில் 50 ஆண்டுகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ உறுதி…

மதுரை

மதுரையில் 44 இடங்களில் தொட்டி கட்டப்பட்டு லோயர் கேம்பிலிருந்து வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும். இதனால் மதுரை மாநகரில் 50 ஆண்டுகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.

மதுரை மாநகராட்சி மண்டலம் 21-வது வார்டு பெத்தானியாபுரம் பகுதியில் குப்பைகளை நீர் நிலைகளில் கொட்டுவதை தவிர்க்கும் வகையில் குப்பைகளை வீடுகளில் சேகரிக்கும் வகையில் புதிதாக வாங்கப்பட்டுள்ள பேட்டரி வாகனங்களை ஆணையாளர் ச.விசாகன் தலைமையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ துவக்கி வைத்து பொதுமக்களுக்கு பச்சை மற்றும் நீல நிற குப்பை கூடைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது:-

மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அடுத்த 2 ஆண்டுகளில் மிக உயர்ந்த நகரமாக குப்பையில்லா தூய்மையான நகரமாக உருவாக உள்ளது. மேலும் அம்ரூட் திட்டத்தின் கீழ் தங்கு தடையின்றி குடிநீர் கிடைக்கின்ற நகரமாக எப்பொழுது தண்ணீர் தேவையோ அப்பொழுது வீட்டு குழாய்களில் உடனடியாக தண்ணீர் பிடிக்கின்ற ஒரு மறுமலர்ச்சியை உருவாக்குகின்ற திட்டத்தை செயல்படுத்துகின்ற அரசாக அம்மாவின் அரசு செயல்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் லோயர் கேம்பிலிருந்து இரும்பு குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு பண்ணைப்பட்டியில் சுத்திகரிக்கப்பட்டு மதுரை மாநகரில் 44 இடங்களில் தொட்டிகள் கட்டப்பட்டு அதன் மூலம் வீடுகளுக்கு விநியோகிக்கபட உள்ளது. இதன் மூலம் மதுரை மாநகருக்கு அடுத்து 50 ஆண்டுகளுக்கு குடிநீர் தட்டுப்பாடே வராது.

மாநகராட்சி பெத்தானியாபுரம் பகுதிகளில் உள்ள சிந்தாமணி வாய்க்கால் சென்ற வாரம் தூர்வாரும் பணி துவங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த தூய்மை பணியானது மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட சுமார் 58 கிலோ மீட்டர் தூரம் உள்ள 13 வாய்க்கால்களிலும் மேற்கொள்ளப்பட உள்ளது.

இப்பகுதியில் குடிநீரில் சாக்கடை கலப்பதை தவிர்க்கும் வகையில் ரூ.34 லட்சம் மதிப்பீட்டில் பழைய குழாய்களை மாற்றி புதிய குழாய்கள் பதிக்கப்பட்டு சரிசெய்யப்பட்டது. மேலும் 100 வார்டுகளிலும் உள்ள பந்தல்குடி வாய்க்கால், மானகிரி வாய்க்கால், பீ.பீ.குளம் வாய்க்கால், கோசாகுளம் வாய்க்கால், பரசுராம்பட்டி வாய்க்கால், விளாங்குடி வாய்க்கால், சொக்கிகுளம் வாய்க்கால், பனையூர் வாய்க்கால், அனுப்பானடி வாய்க்கால், சிந்தாமணி வாய்க்கால், அவனியாபுரம் வாய்க்கால், சொட்டதட்டி வாய்க்கால் மற்றும் கிருதுமால் வாய்க்கால் ஆகிய மழைநீர் வாய்க்கால்கள் இதுபோன்று தூர்வாரப்பட உள்ளது.

பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சேரும் குப்பைகளை மட்கும் மற்றும் மட்காத குப்பை என தரம் பிரித்து வழங்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து பொது இடங்களில் குப்பைகள் கொட்டுவதையும், சிறுநீர் மற்றும் மலம் கழிப்பதையும் தவிர்த்து கழிப்பறைகளை பயன்படுத்த வேண்டும். நாள்தோறும் சேரும் குப்பைகளை சேகரிப்பதற்காக மாநகராட்சியின் சார்பில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் 509 மாசில்லா புதிய பேட்டரி வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. பொதுமக்கள் இதனை சரியாக பயன்படுத்தி நாம் இருக்கும் வீட்டையும் மற்றும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாகவும், தூய்மையாகவும் பராமரிக்க உறுதி ஏற்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் ச.விசாகன், நகரப் பொறியாளர் அரசு, உதவி ஆணையாளர் முருகேசபாண்டியன், நகர்நல அலுவலர் (பொ) சரோஜா, மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல், உதவி செயற்பொறியாளர் குழந்தைவேலு, சுகாதார அலுவலர் விஜயகுமார் உதவி பொறியாளர்கள் பாபு, மணியன், சுகாதார ஆய்வாளர் கோபால் உட்பட மாநகராட்சி அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.