தற்போதைய செய்திகள்

மதுரை திருமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் கோட்டம் தொடங்கப்படும்…

சென்னை:-

மதுரை திருமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் கோட்டம் தொடங்கப்படும் என்றும், வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் அனைத்து குடும்பங்களுக்கும் விபத்து காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் பட்ஜெட் உரை வருமாறு:- 

மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அருகிலேயே அரசு சேவைகளை வழங்க இந்த அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 2011 ஆம் ஆண்டு முதல், 79 புதிய வருவாய் வட்டங்களும், 10 புதிய வருவாய்க் கோட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. 2018-2019 ஆம் ஆண்டில் மட்டும், எட்டு வருவாய் வட்டங்களை இந்த அரசு உருவாக்கியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலிருந்து பிரித்து, கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலத்தை தலைமையிடமாகக் கொண்டு, திருமங்கலம், கள்ளிக்குடி மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று வட்டங்களை உள்ளடக்கிய புதிய வருவாய்க் கோட்டம் ஒன்று 2019 2020 ஆம் ஆண்டில் உருவாக்கப்படும் என்பதை இப்பேரவைக்கு அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

முதியோர், மாற்றுத் திறனாளிகள், விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், திருநங்கைகள் போன்ற நலிவடைந்த பிரிவினருக்கு இந்த அரசு மாதம் 1,000 ரூபாய் ஓய்வூதியமாக வழங்கி வருகிறது. இன்றைய நிலவரப்படி 29.47 இலட்சம் பயனாளிகள் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத்தைப் பெற்று வருகின்றனர். தகுதியுடைய சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியதாரர்களுக்கு, தீபாவளிப் பண்டிகையின் போதும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டும், விலையில்லா சேலைகளும், வேட்டிகளும் வழங்கப்பட்டுள்ளன. 2019-2020 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், சமூகப் பாதுகாப்பு உதவித் தொகை வழங்கும் திட்டங்களுக்காக 3,958 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2018-2019-ம் ஆண்டில், இதுவரை 1.93 லட்சம் வீட்டுமனைப் பட்டாக்களை தகுதி வாய்ந்த ஏழைக் குடும்பங்களுக்கு இந்த அரசு வழங்கியுள்ளது. ஆட்சேபகரமற்ற புறம்போக்கு நிலங்களில் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமித்து வசித்து வருபவர்களின் வீட்டு மனைகளை வரன்முறை செய்து வீட்டுமனைப் பட்டா வழங்க இந்த அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 1.5 இலட்சம் குடும்பங்கள் பயன்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கணினிமயமாக்கல் மூலம் வருவாய் நிர்வாகத்தை மேம்படுத்தும் முயற்சிகளை இந்த அரசு தொடர்ந்து மேற்கொள்ளும். கணினிவழி பட்டா மாறுதல் திட்டம் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மக்களுக்கு பொதுச் சேவைகள் வழங்குவதை மேம்படுத்துவதற்காக, இ-மாவட்டத் திட்டம், நில ஆவணங்களை நவீனமயமாக்கும் திட்டம் மற்றும் இ அடங்கல் திட்டம் ஆகியவை மேலும் வலுப்படுத்தப்படும். மேம்பட்ட தொழில்நுட்ப வசதிகளால், மனுதாரர் சிட்டா நகலையும், அ பதிவேடு நகலையும், இணையதளம் வாயிலாக எந்த நேரத்திலும், எந்த இடத்திலிருந்தும் பெற்றுக் கொள்ளலாம். அவ்வாறு எடுக்கப்படும் நகல்களில், இணையவழி கையொப்பமுடன் சிறப்புக் குறியீடு இணைக்கப்பட்டு, இந்த ஆவணங்கள் சட்டப்பூர்வமான ஆவணங்களாக அனுமதிக்கப்படுகின்றன.

‘உழவர் பாதுகாப்புத் திட்டத்தின்’ கீழ் உள்ள பயனாளிகளுக்கு இந்த அரசு நிதியுதவி வழங்கி வருகிறது. 2018 2019 ஆம் ஆண்டில் இதுவரை 3.14 இலட்சம் பயனாளிகளுக்கு 251.89 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. விபத்து நிவாரணத் திட்டமும், நலிந்தோர் நிவாரணத் திட்டமும், ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

எனினும், இத்திட்டங்களின் கீழ், பொருள் ஈட்டுபவர் இறப்பின்போது 20,000 ரூபாய் மட்டுமே இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டு வருவதால், அது உயர்த்தப்பட வேண்டிய அவசியம் உள்ளது. எனவே, வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் அனைத்துக் குடும்பங்களுக்கும் பயனளிக்கும் வகையில், விரிவான விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் ஒன்றை இந்த அரசு விரைவில் அறிமுகப்படுத்தும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்திட்டத்தின் மூலம், இயற்கை மரணம் மற்றும் விபத்தால் ஏற்படும் மரணத்தின்போது வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை, முறையே இரண்டு லட்சம் ரூபாய் மற்றும் நான்கு லட்சம் ரூபாயாகவும், விபத்தால் ஏற்படும் நிரந்தர ஊனத்திற்காக வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை ஒரு லட்சம் ரூபாயாகவும் உயர்த்தப்படும்.

இத்திட்டத்திற்கான காப்பீட்டுக் கட்டணத் தொகைக்கு 250 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2019 2020 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், உழவர் பாதுகாப்புத் திட்டத்திற்காக 169.81 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வருவாய்த் துறைக்கு மொத்தமாக 6,106.95 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.