தற்போதைய செய்திகள்

மதுரை நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நம்பிக்கை…

மதுரை:-

மதுரை நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மதுரை நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன், அறிமுக கூட்டம் மற்றும் மதுரை நாடாளுமன்ற பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட கழக அவைத்தலைவர் புதூர் துரைப்பாண்டி தலைமை தாங்கினார். மாவட்ட கழக துணை செயலாளர் சி.தங்கம், மாவட்ட கழக பொருளாளர் ஜெ.ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்து பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஒவ்வொரு கழக தொண்டர்களின் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். வானத்து தேவதையாக இருந்து இந்த இயக்கத்தையும், ஆட்சியையும் வழிநடத்தி வருகிறார். அம்மா மறைவிற்குப்பின் இந்த இயக்கம் காணாமல் போய்விடும் என்று சொல்லியவர்கள் மத்தியில் அவர்களுக்கு சம்மட்டி அடி கொடுக்கும் வகையில் ஒரு சிறப்பான ஆட்சியை முதலமைச்சர் வழங்கி வருகிறார். அவருக்கு உறுதுணையாக துணை முதலமைச்சர் இருந்து வருகிறார்.

தற்போது நாடாளுமன்ற தொகுதி கழகத்தின் வேட்பாளராக வி.வி.ஆர்.ராஜ்சத்யனை முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் அறிவித்துள்ளனர். இங்கு போட்டியிடும் வேட்பாளர் நமக்கெல்லாம் நன்கு அறிந்தவர். படித்தவர், பண்புள்ளம் கொண்டவர். அது மட்டுமல்லாது கழக தகவல்தொழில்நுட்ப பிரிவில் கழக பணியாற்றியவர். புரட்சித்தலைவி அம்மா அவர்களால் அடையாளம் காட்டப்பட்டவர். மதுரை மாவட்டம் என்றைக்குமே அம்மாவின் எஃகு கோட்டையாகும். அம்மா அவர்கள் உடல்நலமில்லாமல் இருந்தபோது தொடர்ந்து மும்முத வழிபாடுகளை நடத்தி அம்மாவின் மீதுள்ள பற்றுதல் கொண்டு முதன்மையாக திகழும் மாவட்டம் மதுரை மாவட்டம் தான் என்பதை வரலாற்றில் நாம் பதியவைத்துள்ளோம்.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் ஆகியோரின் வடிவமாக இருந்து மக்கள் திட்டங்களை வழங்கிய மாபெரும் தலைவி அம்மா அவர்கள் இன்றைக்கு அம்மாவின் திட்டங்களை சிந்தாமல், சிதறாமல் மக்களிடத்தில் வழங்கி சத்திமில்லாமல் சாதனை படைத்து வருகிறார் முதலமைச்சர். அவருக்கு உறுதுணையாக இருக்கிறார் துணைமுதலமைச்சர்.

இந்தியாவை வளமை மிக்க நாடாக எடுத்து செல்லும் வகையில் பாரத பிரமதர் சிறப்பாக பணியாற்றி வருகிறார். இந்தியாவின் பாதுகாப்பு மிக்க தலைவர் மோடிஜி ஆவார். அது மட்டுமல்லாது அம்மா மீது பாசமும், மரியாதையும் கொண்டிருந்தார். இவர் தான் நாட்டுக்கு பிரதமராக வரவேண்டும் என்று முதலமைச்சர் முழக்கமிட்டுள்ளார். நிச்சயம் பாரத பிரதமாராக மோடிஜி நிச்சயம் வருவார்.

கழகத்திற்கு ஏற்கனவே மக்கள் செல்வாக்கு இருந்த நிலையில் பொங்கல் பரிசு ரூ.1000, வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு ரூ.2000 உதவித்தொகை, பாரதபி ரதமரின் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 உதவித்தொகை இப்படி திட்டங்கள் மூலம் இன்றைக்கு கழகத்தின் செல்வாக்கு மிகவும் அதிகரித்துள்ளது. அது மட்டுமல்லாது அனைத்து மக்களும் பாராட்டும் வண்ணம் ஒரு சிறப்பான தேர்தல் அறிக்கையை முதலமைச்சரும், துணைமுதலமைச்சரும் அறிவித்துள்ளனர்.

ஆனால் இன்றைக்கு ஸ்டாலின், விவசாய கடனை ரத்து செய்வோம் என்று கூறியுள்ளார். தி.மு.க. மத்தியில் 17 வருடம் அங்கம் வகித்த போது முல்லைப் பெரியாறு, காவேரி போன்றவற்றில் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தது உண்டா? தி.முக. ஆட்சிக்காலத்தில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் ரூ.9136 கோடி தான் வழங்கப்பட்டது. ஆனால் அம்மா ஆட்சியில் இந்த 7 ஆண்டுகளில் ரூ.46,000 கோடி அளவில் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாது கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் 98 சதவிகதம் கடனை செலுத்தி விட்டனர். இது கூட தெரியாமல் ஸ்டாலின் பேசின வருகிறார். தற்போது கூட ரூ.10,000 கோடி அளவில் பயிர்க்கடன் வழங்க முதலமைச்சர் இலக்கு நிர்ணயித்துள்ளார். கழகத்தின் தேர்தல் அறிக்கையில் சிறு, குறு விவசாயிகளின் கடன்களை ரத்து செய்யப்படும் என்று அறிவித்துள்ளனர்.

தி.மு.க. கூட்டணி தான் ஈழத் தமிழர்கள் படுகொலைக்கு காரணமாக இருந்தது. இதற்கெல்லாம் சரியான பாடத்தை புகட்டுவார்கள். தற்போது 40 தொகுதிகளுக்கும் மெகா கூட்டணியை முதலமைச்சரும், துணைமுதலமைச்சரும் உருவாக்கியுள்ளனர். இந்த கூட்டணியை கண்டு ஸ்டாலின் அரை வேக்காட்டுத் தனமாக பேசி வருகிறார். கருணாநிதி வல்லவர், ஆனால் நல்லவர் இல்லை. ஆனால் புரட்சித்தலைவர் நல்லவர், வல்லவர் ஆவார். ஆனால் ஸ்டாலினோ, நல்லவரும் இல்லை, வல்லவரும் இல்லை.

இந்த மதுரை நாடாளுமன்ற தேர்தலில் கழக அரசின் சாதனைகளை மக்களிடத்தில் எடுத்துரைத்து 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் கழக வேட்பாளரை வெற்றிபெற நாம் அல்லும் பகலும் அயராது களப்பணி அற்ற வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசினார்.