சிறப்பு செய்திகள்

மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த போது சிறப்பு பாதுகாப்பு வேளாண் மண்டலம் கொண்டு வராதது ஏன்? தி.மு.க.வுக்கு முதலமைச்சர் சூடான கேள்வி?

சென்னை

14 ஆண்டுகள் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தீர்களே. அப்போது சிறப்பு பாதுகாப்பு வேளாண் மண்டலம் கொண்டு வராமல் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்று சட்டப்பேரவையில் தி.மு.க.வுக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது திமுக உறுப்பினர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மின் இணைப்பு தொடர்பாக கேள்வி எழுப்பினார். அதற்கு மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி பதில் அளித்தார். (மேலும் சில வார்த்தைகளை தெரித்தார். அவை அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது) இதனை தொடர்ந்து எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் துணைக்கேள்வி எழுப்பினார். உங்கள் ஆட்சியில் மின்சாரம் இருக்கிறது என்கிறீர்கள். அப்படியென்றால் கேட்பவர்களுக்கு மின்சாரம் வழங்க வேண்டும் என்று தானே எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கேட்கிறார் என்றார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த காலத்தில் பெரிய கட்சியாக அ.தி.மு.க. இந்தியாவில் 3 இடத்தில் இருந்தது. 37 உறுப்பினர்களை வைத்துக் கொண்டு என்ன செய்தீர்கள் என்று எங்களை பார்த்து நீங்கள் கேட்டீர்கள். அதையே நாங்கள் கேட்கிறோம். நீங்கள் ஏன் குரல் கொடுக்கவில்லை. பேசி வாங்கி கொடுத்திருக்க வேண்டியது தானே. 14 ஆண்டுகள் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தீர்கள். அப்போது சிறப்பு பாதுகாப்பு வேளாண் மண்டலம் கொண்டு வந்திருக்கலாமே என்றார்.

அதைத்தொடர்ந்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மத்தியில் நீங்கள் ஆட்சியில் இருக்கும் போது, காவிரி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று இறுதி தீர்ப்பு வந்தது. நீங்கள் நினைத்திருந்தால், 24 மணி நேரத்தில் அதை செய்திருக்க முடியும். ஆனால் நீங்கள் அதை செய்யவில்லை. ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டும் என்று சட்டப்போராட்டம் நடத்தி அரசிதழில் வெளியிட வைத்தது அம்மாவின் அரசு என்றார்.