தற்போதைய செய்திகள்

மத்திய அரசுக்கு முதல்வர் எழுதிய கடிதம் : அமைச்சர் டி.ஜெயக்குமார் வெளியிட்டார்

சென்னை

காவேரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி எழுதிய கடிதத்தை மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமையிலான பிரதிநிதிகள் குழு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிடம் அளித்தது.

அந்த கடிதத்தில் காவேரி டெல்டா பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களை நிறுத்த வேண்டும் என்றும், எந்த ஒரு திட்டத்தை அறிவிக்கும் முன் தமிழக அரசிடம் ஆலோசிக்க வேண்டும் என்றும் தமிழக அரசின் முடிவை மத்திய அரசு முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் டி. ஜெயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முதலமைச்சரின் உத்தரவின் பேரில், என்னுடைய தலைமையில், ஏ.நவநீதகிருஷ்ணன், விஜிலா சத்யானந்த், ஏ.கே.செல்வராஜ், எஸ்.முத்துகருப்பன், ஏ.விஜயகுமார், என்.சந்திரசேகரன், அ.முகமது ஜான் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழ்நாடு அரசு வேளாண்துறை முதன்மை செயலர், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலர், புதுடெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல முதன்மை உறைவிட ஆணையர் ஆகியோர் அடங்கிய குழு, 10.2.2020 அன்று புதுடெல்லியில், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஆகியோரை சந்தித்து, முதலமைச்சரின் கடிதத்தைக் கொடுத்தது. அந்த கடிதத்தில் உள்ள விவரங்கள் என்ன என்பது பற்றி சிலர் கேட்டிருக்கிறார்கள். அந்த கடிதத்தின் விவரத்தை மக்கள் தெரிந்து கொள்வது நல்லது எனக்கருதி அக்கடிதத்தை பத்திரிகைகளில் வெளியிடுகிறேன்.

மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

கடல் பகுதி மற்றும் நிலப்பகுதிகளில் மேற்கொள்ளப்படும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு தொடர்பான திட்டங்களை அமல்படுத்தும் சட்ட திருத்தம் தொடர்பான அறிவிக்கை குறித்தும், திட்டங்களை மக்கள் கருத்து கேட்காமல் நிறைவேற்றக்கூடாது எனவும் பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளேன். அந்த அறிவிக்கையானது தமிழகத்தின் காவேரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதால் வேளாண்மை மண்டலத்தில் சுற்றுச்சூழலை பாதிக்கும் நிலை ஏற்படும் என்பதால் அதை தமிழக அரசு கடுமையாக எதிர்க்கிறது. எனவே அந்த அறிவிக்கைக்கு எனது எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கிறேன்.

2014-ம் ஆண்டு கால கட்டத்தில் டெல்டா பகுதிகளில் நிலக்கரி படுகை அடிப்படையிலான மீத்தேன் எடுக்கும் திட்டத்தால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழுவை முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அமைத்தார் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.அந்த குழுவானது பல்வேறு விஷயங்களுடன் குறிப்பிட்டுள்ள கருத்துக்களை குறிப்பிடுகிறேன்.

* காவேரி டெல்டா பகுதியானது தமிழகத்தின் நெல் களஞ்சியம் ஆகும். இந்த பகுதி மக்கள் அடிப்படை வாழ்வாதாரமானது விவசாயத்தை சார்ந்தது. நிலக்கரி படுகை மீத்தேன் திட்டத்தின் காரணமாக வேளாண்மை செய்யப்படும் 4,266 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதாலும், தினசரி அடிப்படையில் நாள் ஒன்றுக்கு 1 லட்சம் கிலோ லிட்டர் தண்ணீரை 25 ஆண்டு காலம் உறிஞ்சி வெளியேற்றலாம் என்பதால் அந்த திட்டத்தை எதிர்க்க வேண்டும்.

* தண்ணீரை நிலத்திலிருந்து வெளியேற்றுவதன் மூலம் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது. அதேபோல் 667 சதுர கி.மீ. பரப்பளவில் குறுக்கும், நெடுக்குமாக அமைக்கப்படும் குழாய் பதிப்பு காரணமாகவும் கடும் சுற்றுச்சூழல் ஆபத்து உருவாகும்.

* அதேபோல் வாயுக்களை வெளியேற்றுவதன் காரணமாக காற்று மாசு ஏற்படும்.

* தொழில்நுட்ப நிபுணர் குழுவானது வேளாண்மை மண்டலமாக உள்ள பகுதியில் இந்த திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் பணப்பயன் கிடைக்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளது.

இந்த பரிந்துரையின் அடிப்படையில் புரட்சித்தலைவி அம்மா காவேரி டெல்டா பகுதிகளில் மேற்கொள்ளப்படும் காவேரி படுகை மீத்தேன் எடுக்கும் திட்டத்தை நிறுத்த வேண்டும் என்றும், இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்துவதற்கு முன்பு மத்திய அரசு மாநில அரசிடம் ஆலோசனை நடத்த வேண்டும் என 8.10.2015 அன்று ஒரு உத்தரவை பிறப்பித்தார்.அதன் தொடர்ச்சியாக மேலும் கூடுதலாக புள்ளி விவரங்களை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்கள், பட்டுக்கோட்டை, கடலூர், திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள டெல்டா பகுதி வட்டங்கள் ஆகியவை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக உள்ளது. 28 லட்சம் ஏக்கர் பரப்பளவில் மாநிலத்தின் 32 சதவீத உணவு தேவையை பூர்த்தி செய்வதாக அமைந்துள்ளது.

மேலும் காவேரி டெல்டா பகுதியில் மேற்கொள்ளப்படும் நிலக்கரி படுகை மீத்தேன் எடுக்கும் திட்டத்தால் கடல்நீர் நிலத்துக்குள் புகும் ஆபத்து உள்ளது என தொழில்நுட்ப நிபுணர் கமிட்டி ஏற்கனவே தெரிவித்திருக்கிறது.

காவேரி டெல்டா பகுதியானது தமிழகத்தின் நெற்களஞ்சியமாக உள்ளது. 28 லட்சம் ஏக்கர் பகுதியில் 33.26 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு உணவு தானியங்களை உற்பத்தி செய்து தருகிறது. அதேபோல் தென்னை, வாழை மற்றும் இதர தோட்டக்கலை பயிர்களை உற்பத்தி செய்யும் முக்கிய பகுதியாகவும் விளங்கு கிறது. இப்பகுதியில் அடிக்கடி ஏற்படும் புயல்கள், வெள்ளம் மற்றும் அவ்வப்போது ஏற்படும் வறட்சி ஆகியவற்றால் பாதிக்கப்படும் பகுதியாக இது விளங்குகிறது.

2018-ம் ஆண்டு உருவான கஜா புயல் காரணமாக 65 லட்சம் தென்னை மரங்களும், பல்லாயிரக்கணக்கான விவசாய பயிர்களும் பாதிக்கப்பட்டன. மேலும் வேளாண்மையை வாழ்வாதாரமாக கொண்டு வாழும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். எனவே ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதால் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு மாநிலத்தின் உணவு பாதுகாப்பிலும் தாக்கத்தை உருவாக்கும்.

காவேரி டெல்டா பகுதியானது ஆழ்குழாய் பாசனம் மூலமே விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. எனவே ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதால் நிலத்தடி நீரில் பாதிப்பு ஏற்படுத்துவதோடு அங்கு போடப்பட்டிருக்கும் ஆழ்குழாய் கிணறுகளும் பாதிக்கப்படும்.

அதேபோல் குறுக்கும் நெடுக்குமாக பதிக்கப்படும் எரிவாயு மற்றும் வீணாகும் நீரை கொண்டு செல்லும் குழாய்களால் மேற்பகுதியில் உள்ள இயற்கை வளமும், அதை சார்ந்த பகுதிகளும் பாதிக்கப்படும்.

1985-ம் ஆண்டிலிருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதுதொடர்பாக ஏற்கனவே குறிப்பிடப்பட்டிருக்கிறது. எனவே மேலும் இப்பகுதிகளில் மேற்கொள்ளப்படும் திட்டத்தால் சுற்றுச்சூழல் சமநிலை பாதிக்கப்படும். வேளாண் மண்டலத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். கடல்நீர் உட்புகுதல் மற்றும் பருவநிலை மாற்றத்தால் ஆபத்து நிலவும் சூழ்நிலையில் இது பெரும் பாதிப்பை உருவாக்கும்.

காவேரி டெல்டா பகுதிகளில் சதுப்பு நிலக்காடுகள் அமைந்துள்ள பகுதியாகும். இவையும் இத்திட்டத்தால் பாதிக்கப்படும். மேலும் காவேரி டெல்டா பகுதிகளானது தொல்லியல் மற்றும் கலாச்சார பாரம்பரியம் கொண்டது. இப்பகுதியில் புகழ் பெற்ற தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம், கங்கை கொண்ட சோழபுரம், நவக்கிரக கோயில்கள், வேளாங்கண்ணி தேவாலயங்கள், நாகூர் தர்கா போன்றவை அமைந்துள்ளன.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் இந்த கலாச்சார பாரம்பரிய சின்னங்கள் சேதமடையும் ஆபத்து உள்ளது.

எனவே காவேரி டெல்டா பகுதியில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தும் திட்டம் இருந்தால் அதை மத்திய அரசு கைவிட வேண்டும். காவேரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவித்த தமிழக அரசின் முடிவை மத்திய அரசு முழுவதுமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது தொடர்பாக அரசு சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்கும் என்று தங்கள் கவனத்திற்கு கொண்டு வருவதோடு மாநில அரசின் முடிவுக்கு மத்திய அரசு முழுமையான ஆதரவை வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.